வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தெரிவித்துள்ளார்
வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாகக் காணப்படும் பிரச்சினைகள், அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தடைகள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் தம்மிக்க படபெந்தி,
2012ஆம் ஆண்டு புவியிடங்காட்டித் தொழில்நுட்பத்தைப் (ஜி.பி.எஸ்.) பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அவற்றில் மருத்துவமனைகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தனியார் காணிகளும் உள்ளடங்கியுள்ளது.
இக்காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டது ,
அந்தக் குழுவுக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், ஓராண்டு கடந்தும் இறுதி அறிக்கை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.
சில அதிகாரிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் செயன்முறையை முழுமைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
எனினும், ஆய்வுகள் நிறைவடைந்து விடுவிப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்ட காணிகளைக்கூட இதுவரை விடுவிக்க முடியாத நிலை காணப்படுகிறது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பித்து, அதன் ஒப்புதலுடன் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களையும் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளில் அடையாளம் காண வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
