இத்தாலியின் பல நகரங்களில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளைப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஞாயிற்றுக்கிழமை கண்டித்துள்ளார். அத்துடன், வன்முறையை எதிர்கொண்ட காவல்துறையினருக்குத் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று மிலன் நகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது நான்கு காவல்துறை அதிகாரிகளும் 20 போராட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு பெறு பார்
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, ஊதிய வளர்ச்சியின்மை மற்றும் மலிவு விலையில் வீடுகள் கிடைப்பதில் நிலவும் சிரமங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மிலன் நகரின் மத்திய பகுதியான பியாஸ்ஸா டுவோமோவில், முகமூடி அணிந்த சில இளைஞர்கள் காவல்துறையினர் மீது பட்டாசுகளையும் பாட்டில்களையும் வீசியதுடன், தடுப்புகளையும் அமைத்ததாக இத்தாலிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சுமார் 50 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் பாதிப் பேர் சிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுரின், போலோக்னா மற்றும் பெர்காமோ உள்ளிட்ட நகரங்களிலும் மோதல்கள் இடம்பெற்றன. போலோக்னாவில் காவல்துறையினர் நீர்த்தாரைப் பீரங்கியைப் பயன்படுத்தியதுடன், நான்கு பேரைக் கைது செய்தனர். மேலும், ஏழு பேர் மீது வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வன்முறைகளுக்குப் பதிலளித்த பிரதமர் மெலோனி, போராட்டங்களைப் பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்த முயன்றவர்களைக் கண்டித்தார்.
போராட்டம் நடத்துவது உரிமை; ஆனால், நமது நகரங்களுக்குத் தீ வைப்பது உரிமையல்ல என்று அவர் தெரிவித்தார்.
மிலன் நகர மேயர் கியூசெப்பே சலாவும் மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பான கவலைகளை ஏற்றுக்கொண்டார். அதேவேளை, காவல்துறையினர் மீதான தாக்குதல்களையும் நகரத்துக்குச் சேதம் ஏற்படுத்திய செயல்களையும் நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டார்.
