கடந்த அக்டோபர் 16-ஆம் திகதி காலை, அலங்காரக் குடை தயாரிப்பிற்கான பொருட்களை வாங்கப் புறக்கோட்டை சென்ற தாய், மணிகள் விற்கும் கடை ஒன்றில் வைத்துத் தனது போன் காணாமல் போனதை அறிந்து பதறியுள்ளார். வியாபாரத் தேவைகள் அனைத்தும் அந்த போனிலேயே இருந்ததால் செய்வதறியாது தவித்தவர், அங்கிருந்த தகவலறியும் பாடசாலை ஆசிரியை ஒருவரின் உதவியோடு வீட்டில் இருந்த தனது மகனைத் தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறியுள்ளார்.
நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட அம்மாணவன், உடனடியாக Google Find My Device தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைபேசி மாளிகாவத்தை பகுதியில் இருப்பதைக் துல்லியமாகக் கண்டறிந்துள்ளார். தொடர்ந்து, கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யத் தேவையான IMEI இலக்கத்தை உடனடியாக வழங்கியதுடன், போனில் உள்ள தனிப்பட்ட தரவுகள் தவறான கரங்களுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தொலைவிலிருந்தே (Remote Lock) போனைப் பூட்டியும் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாணவன் அளித்த GPS இருப்பிடத் தகவலை வைத்து மாளிகாவத்தை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைந்து செயற்பட்டு, வெறும் 15 நிமிடங்களுக்குள் தொலைபேசியை மீட்டுத் தாயிடம் ஒப்படைத்தனர். போனின் பின்புற உறை மற்றும் பாதுகாப்பு கண்ணாடி கழற்றப்பட்டிருந்த நிலையில், அதை விற்க முயன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சரியான நேரத்தில் தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தித் தாய்க்கு உதவிய மாணவனுக்கும் , உடனடியாக நடவடிக்கை எடுத்த கோட்டை மற்றும் மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இச்சம்பவம் உணர்த்தும் முக்கிய பாதுகாப்பு வழிகாட்டல்கள்
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Find My Device வசதியை எப்போதும் இயக்கி (ON) வைத்திருங்கள் (Settings ➔ Google ➔ All Services ➔ Find My Device என்பதை On செய்யவும்).
போன் தொலைந்தால் உடனடியாக அதை லாக் (Lock) செய்து, தரவுகளைப் பாதுகாக்கவும் (வேறொரு போன் அல்லது கணினியில் android com/find தளத்திற்குச் சென்று, உங்கள் Google கணக்கில் லாகின் செய்து ‘Secure Device’ கொடுக்கவும்).
உங்கள் போனின் IMEI இலக்கத்தைப் பாதுகாப்பான இடத்தில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் (போன் டயல் பேடில் *#06# என டைப் செய்து உடனே IMEI எண்ணை அறிந்து குறித்துக் கொள்ளலாம்).
அவசரத் தேவைக்கான குடும்பத்தினரின் போன் இலக்கங்களை மனப்பாடமாக அல்லது தனிக் குறிப்பேட்டில் வைத்திருப்பது நல்லது.
போன் திருடப்பட்டால் நீங்களாகச் சென்று ஆபத்தைச் சந்திக்காமல், உடனடியாக பொலிஸாரை நாடுங்கள்
