முல்லைமோடி – 2026 மற்றும் முல்லைச்சுவை – 2026
பாரம்பரியக் கலைகள் மற்றும் உணவுப் பண்பாட்டை கொண்டாடும் மூன்று நாள் மாபெரும் விழா!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தனித்துவமான பாரம்பரியக் கலைகள், நாட்டுக்கூத்து மரபுகள், வரலாற்றுப் பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களைப் பாதுகாத்து, அவற்றை இளைய தலைமுறையினருக்கும் பொதுமக்களுக்கும் அறிமுகப்படுத்தும் நோக்கில் “முல்லைமோடி – 2026: பாரம்பரியக் கலைகளின் சங்கமம்” மற்றும் “முல்லைச்சுவை – 2026: பாரம்பரிய உணவுகளின் சங்கமம்” ஆகிய நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மூன்று நாள் பண்பாட்டுத் திருவிழா, 2026 ஒக்டோபர் 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில், தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை முல்லைத்தீவுக் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
விழாவின் பிரதான நோக்கங்கள்
1. முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரம்பரிய நாட்டுக்கூத்து, கிராமியக் கலைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்தல்.
2. பாரம்பரியக் கலைஞர்களின் திறமைகளையும் பங்களிப்புகளையும் அங்கீகரித்து கௌரவித்தல்.
3. அழிந்துவரும் கலை வடிவங்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுதல்.
4. பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பாரம்பரியக் கலைகள் மீதான ஆர்வத்தை வளர்த்தல்.
5. பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்தி உள்ளூர் உணவுப் பண்பாட்டை ஊக்குவித்தல்.
6. முல்லைத்தீவின் பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உள்ளூர் சமூகத்தின் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்.
பாரம்பரியக் கலை நிகழ்வுகள் – முல்லைமோடி 2026
மூன்று நாட்களிலும் முல்லைத்தீவின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் பிரதிபலிக்கும் நாட்டுக்கூத்துகள், கிராமியக் கலை நிகழ்வுகள் மற்றும் நாடகங்கள் அரங்கேற்றப்படவுள்ளன.
முதலாம் நாள் – 23.10.2026, வெள்ளிக்கிழமை
• காத்தவராயன் கூத்து – மல்லாவி தமிழ்த்தாய் கலா மன்றம்.
• பண்டாரவன்னியன் நாடகம் – கற்சிலைமடு பரந்தாமன் நாடக கலாமன்றம்.
• பண்டாரவன்னியன், வன்னியர் திலகம் மற்றும் முல்லைமோடி தொடர்பான மூன்று நூல்களின் வெளியீடு.
• மூத்த கலைஞர்களைக் கௌரவித்தல்.
இரண்டாம் நாள் – 24.10.2026, சனிக்கிழமை
• வேழம் படுத்த வீராங்கனை – சிந்து நடைக்கூத்து, முள்ளியவளை இயல் இசை நாடக கலாமன்றம்.
• காத்தவராயன் கூத்து – கொண்டலடி சித்தி விநாயகர் கலாமன்றம்.
• குமாரபுரம், நிலக்கிளி மற்றும் வேழம் படுத்த வீராங்கனை ஆகிய நூல்களின் வெளியீடு.
• பாரம்பரியக் கலைஞர்களைக் கௌரவித்தல்.
மூன்றாம் நாள் – 25.10.2026, ஞாயிற்றுக்கிழமை
• பண்டாரவன்னியன் நாடகம் – வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்கள்.
• முல்லைமோடி கோவலன் நாட்டுக்கூத்து – முள்ளியவளை கலைத்தாய் நாடகமன்றம்.
• ஆனையை அடக்கிய அரியாத்தை மற்றும் வன்னிவள நாட்டுப் பாடல்கள் ஆகிய நூல்களின் வெளியீடு.
• கலைஞர்களைக் கௌரவித்தல் மற்றும் மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்குதல்.
பாரம்பரிய உணவுத் திருவிழா – முல்லைச்சுவை 2026
முல்லைத்தீவின் பாரம்பரிய உணவுப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், மூன்று நாட்களிலும் மாலை 4.30 மணிக்கு பாரம்பரிய உணவுத் திருவிழா ஆரம்பமாகும்.
இந்நிகழ்வு உள்ளூர் உணவு மரபுகளைப் பாதுகாப்பதுடன், பாரம்பரிய உணவுத் தயாரிப்பாளர்களுக்கும் சிறு தொழில்முயற்சியாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பிரதம அதிதிகள் மற்றும் விசேட பங்கேற்பு
23 ஒக்டோபர் 2026
• கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் – வடக்கு மாகாண ஆளுநர்.
• கௌரவ கமகெதர திசாநாயக்க – புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்.
24 ஒக்டோபர் 2026
• கௌரவ உபாலி சமரசிங்ஹ – கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்.
25 ஒக்டோபர் 2026
• கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரன் – கடற்றொழில், நீரியல் வள அமைச்சர்.
இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கலைஞர்கள், கல்விச் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கவுள்ளனர்.
“முல்லைத்தீவு மாவட்டம் வளமான வரலாற்றையும் தனித்துவமான பண்பாட்டு மரபுகளையும் கொண்ட பிரதேசமாகும். எமது பாரம்பரியக் கலைகளும் உணவுப் பண்பாடும் எமது சமூகத்தின் அடையாளங்களாக விளங்குகின்றன.
முல்லைமோடி மற்றும் முல்லைச்சுவை நிகழ்வுகள் வெறுமனே கலை மற்றும் உணவுத் திருவிழாக்களாக மட்டுமன்றி, எமது பண்பாட்டு மரபுகளைப் பாதுகாக்கவும், கலைஞர்களைக் கௌரவிக்கவும், இளைய தலைமுறையினருக்குப் பண்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முல்லைத்தீவின் சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்திக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளாகும்.
எமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பது எமது அடையாளத்தைப் பாதுகாப்பதாகும். இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு எமது கலைஞர்களுக்கு ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.”
பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அழைப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் பண்பாட்டு மரபுகளையும் கலைச் செல்வங்களையும் வெளிப்படுத்தும் இம்மூன்று நாள் விழாவில் பொதுமக்கள், கலை ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.
“முல்லைக் கலையால் மகிழ்வோம்! முல்லைச் சுவையால் இணைவோம்!”
மாவட்டச் செயலகம், முல்லைத்தீவு.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்.
முல்லைத்தீவு
