ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடர்ந்த புதர்க்காட்டில் ஆறு நாட்களாகக் காணாமல் போயிருந்த 17 வயது இளைஞர் ஒருவர், தீவிர தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
மெல்போர்ன் நகரிலிருந்து கிழக்கே சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில், வில்லியம் என்ற இளைஞர் தனது நண்பருடன் முகாமிட்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகாமிலிருந்து சில உபகரணங்களை எடுத்துவருவதற்காக நண்பரை விட்டுப் பிரிந்த வில்லியம், வழிதவறி அடர்ந்த காட்டுக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், அவரது நண்பர் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து ஹெலிகொப்டர்கள், விசேட மீட்புப் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், ஸ்டோனி க்ரீக் பகுதிக்கு அருகில் வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தேடுதலின்போது வில்லியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். முதலில் அவரது மீன்பிடி உபகரணப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வறண்ட ஆற்றுப் படுகையில் பாறையொன்றின் மீது அவர் உறங்கிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஹெலிகொப்டரின் சத்தத்தால் விழித்துக்கொண்ட வில்லியம், மீட்புப் படையினரை நோக்கிக் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் விமானப்படை அதிகாரிகள் கயிறு மூலம் கீழிறங்கி அவரை மீட்டு, கட்டளை மையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆறு நாட்களாக உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி காட்டுப்பகுதியில் இருந்தபோதிலும், வில்லியம் உற்சாகத்துடனும் பெரும்பாலும் நல்ல உடல்நிலையுடனும் காணப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் மேலதிக மருத்துவப் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது மகன் உயிருடன் மீட்கப்பட்டமை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த அவரது தாய், ஆபத்தான சூழ்நிலையிலும் ஒரே இடத்தில் தங்கியிருந்து மீட்புப் படையினர் தன்னைக் கண்டுபிடிப்பதற்காகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆற்றங்கரையோரத்தில் தவறி விழுந்த பின்னர், மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் அங்கேயே தங்கியிருந்ததாக வில்லியம் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
