அடுத்த வருட வரவு செலவுத் திட்ட அறிவிப்பில் முன்மொழியப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு கொடுப்பனவை முழுமையாக அமல்படுத்த எதிர்வரும் யூலை மாதம்வரை காலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் திடுதிப்பென ஏதோவொரு தேர்தலை நடத்தும் எண்ணம் அநுர குமர அரசாங்கத்திடம் உள்ளதா? இதுபற்றி இந்தியாவுக்கு என்ன சொல்லப்பட்டது? சீனா இதன் பின்புலத்தில் இயங்குகிறதா?
இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாட்டின் தலைமைப் பதவியேற்பவர் அநேகமாக பாதுகாப்பு அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றை தமதாக்கிக் கொள்வது வழக்கம். அநுர குமர திஸ்ஸநாயக்கவும் இதனையே பின்பற்றியுள்ளார்.
சட்டசபைக் காலத்தில் நிதியமைச்சராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரான முதலாவது அமைச்சரவையில் அதே பதவியை வகித்தார். ஆனால், இவர் நாட்டின் தலைவராக ஆட்சி புரிந்த பதினொரு ஆண்டுகளும் நிதி அமைச்சை தமதாக்கிக் கொள்ளவில்லை ஏற்கனவே நிர்வாக சேவையிலிருந்த அனுபவசாலியான றொனி டி மெல்லை நிதியமைச்சராக்கினார். இலங்கை அரசியலில் நீண்டகாலம் நிதியமைச்சர் பதவியை வகித்தவர் றொனி டி மெல்தான். ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட தெவிநுவர தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானவர் இவர்.
அநுர குமர திஸ்ஸநாயக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். கடந்த மாதம் சமர்ப்பித்த 2027ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை ஐந்து மணித்தியாலங்கள் நிகழ்த்தினார். எதிர்க்கட்சியினர் இடையிடையே குறுக்கீடு செய்து எழுப்பிய கேள்விகளுக்கு தமக்கேயுரிய பாணியில் பதிலளித்தது இவரது சாதனை. ஐந்து மணித்தியாலங்கள் இவர் நிகழ்த்திய உரையை நீண்ட உரை என்று பலரும் பாராட்டியுள்ளனர்.
1978ம் ஆண்டு றொனி டிமெல் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நிகழ்த்திய உரையே இலங்கை வரலாற்றில் மிக நீண்டதென்பதை இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை. 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2025 நவம்பர் 27ம் திகதி அநுர குமர திஸ்ஸநாயக்க சமர்ப்பித்தார். இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட எண்பதாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5,300 மில்லியன் ரூபா வருமானத்தையும், 7,057 மில்லியன் ரூபாவை செலவாகவும் கொண்டது. இதனை உத்தேச வரவு செலவு என்று குறிப்பிடுவதே நடைமுறை. ஆனால், அடுத்த வருட வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது முன்னைய ஆண்டின் வரவும் செலவும் தலைகீழாகிவிடும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் எந்தத் திருத்தங்களும் இன்றி பதினொரு வரவு செலவுத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. இதனை தமக்கான திறமையென்று றொனி டி மெல் ஊடக செவ்வியொன்றில் தெரிவித்து சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டைப் பெற்றிருந்தார்.
கடந்த மாதம் அநுர குமர திஸ்ஸநாயக்க சமர்ப்பித்த 2027ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வாரம் இரண்டாவது வாசிப்பில் நிறைவேறியது. இப்போது ஒவ்வொரு அமைச்சுகள் மீதானதான குழுநிலை விவாதம் இடம்பெறுகிறது. டிசம்பர் மாதம் 14ம் திகதி வரை இது இடம்பெற்று அன்றைய நாள் வாக்கெடுப்பு நடைபெறும். ஜனநாயக ரீதியாக வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதாக காட்டுவதற்கென ஏதாவது சில திருத்தங்களை எதிர்க்கட்சிகள் முன்மொழிவது இடம்பெறுவதுண்டு. ஆட்சித்தரப்பும் அதே ஜனநாயக வழிமுறையில் அவற்றுள் சிலவற்றை விட்டுக்கொடுத்து ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஆட்சித்தரப்புக்கு நிறைவான பெரும்பான்மை இருப்பதால் தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தாங்கள் விரும்புவதுபோல் நிறைவேற்றும் அதிகாரம் அதற்கு உண்டு.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆட்சித்தரப்பான தேசிய மக்கள் சக்தியில் 159 எம்.பிக்கள் உள்ளனர். மிகுதி 66 பேரும் எதிரணியை சேர்ந்தவர்கள். இவர்களுள் 40 எம்.பிக்கள் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்கட்சியினர். இலங்கை தமிழரசு கட்சியில் எட்டு உறுப்பினர்களும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் மூவரும் உள்ளனர். மிகுதி பத்து உறுப்பினர்களும் வெவ்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை சொரியல்கள் என்றே கூறுவர். 66 உறுப்பினர்களைக் கொண்ட எதிரணி எப்போதும் ஒன்றுபட்டு இயங்குவது கிடையாது. சம்பிரதாயத்துக்கு குழுநிலை விவாதத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடும் வாக்கெடுப்புக்கு விடப்படும்போது ஆட்சித்தரப்பிடமே மண்டைக் கயிறு இருக்கும்.
எதிரணியினர் தங்கள் பங்குக்கு தங்கள் தரப்புக் கொள்கைகளை முன்வைத்து உரை நிகழ்த்துவர். நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ அறிக்கையான கன்சாட்டில் தங்கள் உரை இடம்பெறவிருப்பதால் இந்த உரைகள் மிகக் கவனமாக தயாரிக்கப்படும். 1960ல் வரவு செலவுத் திட்டத்தின் விவாதத்தின்போது தோல்வியடைந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தைக் கலைக்க வழிவகுத்தது. 1977ன் பின்னர் விகிதாசார தேர்தல் முறைமை நடைமுறைக்கு வந்ததால் அவ்வாறான சாத்தியக்கூறுகள் பின்னர் இடம்பெறவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் வராதவரை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புத் தோல்வியின் அடிப்படையில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் இனிமேல் இருக்காது என்று கூறலாம்.
தமிழரசுக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய இரண்டும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் அநுர அரசு காட்டும் அக்கறையின்மையை முக்கிய பேசு பொருளாக மூன்றாவது வாசிப்பு விவாதத்தில் கையிலெடுப்பார்கள். கடந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வடமாகாண சபைக்கான தேர்தலில் முதல் அமைச்சர் பதவிக்கு கட்சி இடமளித்தால் தாம் போட்டியிட தயாராக இருப்பதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதன் பின்னரான தமிழரசுக் கட்சி தலைவர் போட்டியிலும் தோல்வியுற்ற சுமந்திரன் தமது எதிர்கால அரசியல் இருப்புக்கான ஏறுபடியாக மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாட்டம் காட்டிக் கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.
2026ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்கான ஆரம்ப வேலைகள்கூட இடம்பெறவில்லை. பேரிடர் நிவாரணத்துக்கு இந்த நிதி செலவிடப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா பகிரங்கமாகக் கூறியிருந்தார். இது தவறான தகவல் என்றும் தேர்தலுக்குத் தேவையான நிதி கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் ஒருவர் ரில்வின் சில்வாவின் கூற்றை மறுதலித்து கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், ரில்வின் சில்வா கூறியதுபோல மாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறவில்லை.
2027 வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதனூடாக அநுர குமர அரசு மாகாண சபை தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக்கியுள்ளது. மாகாண சபைத் தேர்தல் உட்பட தமிழர் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் தருமாறு தமிழரசுக் கட்சி அதிகாரபூர்வமாக அநுர குமரவுக்கு அனுப்பிய கடிதத்துக்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதனால் மனம் உடைந்துள்ள தமிழரசுக் கட்சியினர் எதுவுமே செய்ய முடியாத நிலையில், அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று ஊடகங்களுக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் கருத்துக்கூறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் 2027ம் ஆண்டுக்கானது. இதில் அனைத்து மட்டத்திலும் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சம்பள உயர்வு என்பது ஒரு வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து கொடுக்கப்படுவது. ஆனால், வரவு செலவுத் திட்டத்தில் தாராளமாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழமைபோல ஜனவரி மாதத்தில் வழங்கப்பட மாட்டாது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்கு பின்னரும் யூலை மாதத்திலுமே இது வழங்கப்படுமென வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அநுர குமர தெரிவித்துள்ளார். ஜனவரியில் அடிப்படை சம்பள அதிகரிப்பு. ஆனால், கொடுப்பனவு யூலை மாதத்தில் என்று வழமைக்கு மாறான நடைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வுக்கு எதற்காக அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த யூலை மாதத்துக்கு முன்னர் ஏதோ ஒரு தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்கலாமென பரவலாக பொதுவெளியில் பேசப்படுகிறது. எதிர்வரும் ஆண்டின் யூன் மாதத்துக்குள் ஏதோ ஒரு தேர்தல் நடத்தப்பட இருப்பதாகவும், அதற்கான உத்தரவாதம் இலங்கை அரசால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் ஓடித்திரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் இப்போதைக்கு இடம்பெற மாட்டாது. மாகாண சபைத் தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. அப்படியானால் ஜனாதிபதித் தேர்தல் முற்கூட்டியே நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சம்பள அதிகரிப்பு கொடுப்பனவுக்கு 2027 யூலை வரைக்கும் காத்திருக்க வேண்டியதன் நோக்கம் என்னவென்பதை ரில்வின் சில்வாவிடம்தான் கேட்க வேண்டும். அவருக்கு ஆலோசனை வழங்குவது சீனாவாக இருக்குமானால் இலங்கையின் வழித்தடத்தை இந்தியா எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்குமோ தெரியாது.
