தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலினால் தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி குருபரன் நீதிமன்ற படியேறியுள்ளார்.
அத்துடன் கூலுக்கு எதிராக, சட்டத்தரணி கு. குருபரன் 1,000 மில்லியன் (100 கோடி) ரூபாய் இழப்பீடு கோரி யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
‘கொழும்பு டெலிகிராப்’ இணையத்தளத்தில் ரட்ணஜீவன் கூல் கட்டுரையொன்றை கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி எழுதியிருந்தார். அதில், “போலியான உறுதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் சட்டத்தரணிகளைக் காப்பாற்றும் நோக்கில், கலாநிதி கு. குருபரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரையைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
ரட்ணஜீவன் கூலின் இந்தக் கூற்றானது, தனது சட்டத் தொழிலையும், தொழில்சார் நேர்மையையும் சவாலுக்கு உட்படுத்தும் வகையிலும், தனக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் முன்வைக்கப்பட்ட திட்டமிட்ட அவதூறு என கலாநிதி கு. குருபரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமது சட்டத்தரணிகளான பெனார்சி பிரதீபன் மற்றும் த. தினேஸ் ஆகியோர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ரட்ணஜீவன் கூலின் கருத்துக்களால் தனக்கு ஏற்பட்ட அபகீர்த்தி மற்றும் இழப்பீடாக 100 கோடி ரூபாயை அவர் வழங்க வேண்டும் என கலாநிதி கு. குருபரன் கோரியுள்ளார்.