வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்தபின்னரும், அதன் அடிப்படை கோரிக்கைகளும் கொள்கைகளுமே தமிழின விடுதலை பாதையின் அடிநாதமாகவும், அடித்தளமாகவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கல்வியாளர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழ்மக்களின் அபிலாசையை வெளிப்படுத்த பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடக பிரதிநிதிகள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினரை ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.
ஊடக சந்திப்பில் ஊடக சந்திப்பில் தவத்திரு வேலன் சுவாமிகள்,அருட்தந்தை அ.அகஸ்ரின் ,அருட்பணி க.ஜெகதாஸ் மற்றும் க.இதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.