பிரான்ஸ் அரசியலில் சாதனை – 18 வயதில் நகர சபை உறுப்பினராகத் தேர்வான ஈழத் தமிழ் மாணவர்!
பிரான்ஸில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஈழத் தமிழரான 18 வயது மாணவர் ஒருவர் நகர சபை உறுப்பினராகத் தேர்வாகி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸின் Paris-Panthéon-Assas பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்டம் பயின்று வரும் பிலால் லுக்மான் (Bilaal Lookman) என்பவரே இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.
பிரான்ஸில் பிறந்த இவரது குடும்பத்தினர் இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாகும்.
பாரிஸின் புறநகர் பகுதியான Guyancourt நகராட்சியில் போட்டியிட்டு, பிரான்ஸின் மிக இளவயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக இவர் உருவெடுத்துள்ளார்.
15 வயதிலிருந்தே பிரெஞ்சு நாடாளுமன்றம் மற்றும் கல்வி அமைச்சகங்களில் பயிற்சியாளராகப் பணியாற்றி, அரசியல் மற்றும் பொதுச் சேவையில் பிலால் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
“நாம் எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமல்ல, இணைந்து எதை உருவாக்குகிறோம் என்பதே முக்கியம்” எனக் கூறும் பிலால், இளைஞர்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது தனது சட்டப் படிப்பையும், நகர சபை உறுப்பினர் பணிகளையும் சமமாக நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு உள்ளது.
இலங்கை பூர்வீகத்தை கொண்ட மற்றுமொரு இளம் பெண்ணான ஆதித்யா அனந்தராஜா (Athithiya Anantharajah), 25 வயதில் துணை மேயராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், பிலாலின் இந்த வெற்றி புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.