மே- 18
மரண ஓலம் காதைக் கிழிக்க,
மனித உடல்கள் சிதறிக்
கிடக்க,
சதைகளின் சகதிகளில் சரித்திரம்
எழுதப்பட்ட இறுதி நாள்தான் மே 18.
குழந்தைகள் தங்கள் பெற்றோரைத் தேடி அழுத மண்ணிது…
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பெயரை கடைசியாகக் கூப்பிட்ட மண்ணிது…
குண்டுகள் மட்டும் விழவில்லை…
மனிதத்தின் மனசாட்சியும் அங்கே உடைந்தது…
அதுதான் முள்ளிவாய்க்கால்…
முள்ளிவாய்க்கால் முடிவல்ல…
அது ஒரு இனத்தின் கண்ணீரால் எழுதப்பட்ட வரலாற்றின் ஒரு பக்கம்…
2009 மே மாதம்…
உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருந்தன…
அங்கே ஆயிரக்கணக்கான எம் உறவுகள் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருந்தார்கள்.
அங்கே போராளிகள் மட்டும் இல்லை…
குழந்தைகள் இருந்தார்கள்…
மருத்துவமனைகள் இருந்தன…
பசியால் அலறும் மக்கள் இருந்தார்கள்…
ஒரு தாய் தன் குழந்தையை மார்போடு கட்டிக்கொண்டு உயிர் காக்க ஓடினாள்…
ஒரு குழந்தை “அம்மா… தண்ணி… தண்ணி…” என்று கதறியது…
ஆனால் அந்த மண்ணின் பதிலோ,
வெடிகுண்டுகளின் சத்தங்களை மட்டுமே உதிர்த்தது.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் அல்ல;
அது சொல்ல முடியாத வலியின் பெயர்.
ஆனால் இன்று சிலர் கேட்கிறார்கள் —
“ஏன் இன்னும் நினைவேந்தல்?” என்று…
வரலாறுதான் எமது வழிகாட்டி.
அதனால்தான் நினைவு கூறுகின்றோம்.
எமது வலியை அடுத்த சந்ததியினருக்குக் கடத்த வேண்டும் என்பதற்காகத்தான் நினைவேந்தல்.
ஐ.நா. தான் விட்ட தவறை இன்னொரு தடவை விடக்கூடாது என்பதற்காகத்தான் நினைவேந்தல்.
இனிமேலும் உண்மை,
நீதி,
நியாயம்
தோற்றுவிடக்கூடாது.
அதற்காகத்தான் நினைவேந்தல்.
இது பழிவாங்கலுக்கான குரல் அல்ல;
இது மனித உரிமைக்கான குரல்.
இது நீதிக்கான குரல்.
இனி எந்த இனமும் இப்படிப் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கான குரல்.
இன்றைய சமுதாயமே!
உங்கள் தொலைபேசியில் பார்க்கும் அந்தப் புகைப்படங்கள்,
ஒரு காலத்தில் உயிரோடு இருந்த எம் உறவுகள்.
நீங்கள் கேட்கும் அந்த அழுகைச் சத்தங்கள்,
எம் இனத்தின் உண்மை வரலாறு.
முள்ளிவாய்க்கால் எங்களைச் சிதைக்கவில்லை…
மாறாக, எங்கள் விடுதலை நெருப்பைப் பற்றவைத்துள்ளது.
எங்கள் மொழியை அழிக்க நினைத்தாய் — முடியவில்லை.
அதனால் “சிங்களம் மட்டும் ஆட்சிமொழி” என்றுரைத்தாய்.
எங்கள் அடையாளத்தை புதைக்க நினைத்தாய் — முடியவில்லை.
அதனால் சட்டங்கள் மூலமாக அழிக்க முயலுகின்றாய்.
எங்கள் நினைவுகளை எரிக்க முடியவில்லை.
“மன்னிப்போம், மறப்போம்” என்கிறாய்.
எங்கள் கலை,
கலாச்சாரம்,
பண்பாட்டை அழிக்க முடியாது!
ஏனெனில் அவை எமது ஆன்மாவில் இரண்டறக் கலந்துள்ளன.
“முள்ளிவாய்க்கால் முடிவல்ல;
எமக்கான விடுதலையின் உந்து சக்தி.”
“எரிந்த உடல்கள் மண்ணாகிப் போயிருக்கும்…
ஆனால் எமது நினைவுகள் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றன!”
இந்த நினைவேந்தல்…
வெறுப்பை விதைப்பதற்கல்ல;
எமது வரலாற்றை மறக்காமல் இருப்பதற்குத்தான்.
மௌனமாக அஞ்சலிக்க முயலுகிறோம்;
ஆனால் முடியவில்லை.
விம்மியழ வார்த்தையில்லை…
எம் உறவுகளே, உங்களை எப்படி மறப்போம்?
மரணம் எல்லோருக்கும் பொதுவானது.
ஆனால் பூவையும் பிஞ்சையும் அள்ளிப் புதைத்தோமே…
நெஞ்சம் மறக்கவில்லையே!
நெஞ்சம் பொறுக்கவில்லையே!
எந்தொரு நாட்டிலும்,
எந்தொரு இனத்திற்கும்
இப்படி ஒரு நிலை வரக்கூடாது.
வரவே கூடாது.
“இத்தோடு முடிந்தது கதை” என்று நினைத்தாயோ?
அங்குதான் நீ தோற்றுப் போனாய்.
உடலால் மட்டும்தான் எம்மை அழிக்க முடியும்;
உணர்வால் எம்மை யாராலும் அழிக்க முடியாது.
எத்தனை நாடுகளின் துணைகொண்டு வஞ்சனை தீர்த்தாய்!
அதில் சில வல்லரசுகளும் உனக்கு துணையாக நின்றன.
தோல்வி என்பது எமக்கு நிரந்தரமில்லை.
சிந்திய கண்ணீரும் சிந்திய ரத்தமும் என்றும் வீண்போகாது.
ஏனெனில் அது விடுதலையின் நெருப்பு!
துப்பாக்கி முனையில் நாம் தோற்றிருக்கலாம்;
ஆனால் உணர்வால் நாம் தோற்கவில்லை.
உளத்தால் நாம் தோற்கவில்லை.
அறத்தால் நாம் தோற்கவில்லை.
அறிவால் நாம் தோற்கவில்லை.
அடுத்த தலைமுறைக்கு சரியான வரலாற்றைக் கடத்துவதில் நாம் தோற்கவில்லை.
அறிவாயுதத்தை கையிலெடுப்போம்.
அடுத்த தலைமுறையோடு போராடுவோம்.
அதுதான் நம் தேசத்திற்கான கடமை.
“தீபங்கள் அணையலாம்;
தீ அணைவதில்லை.”
“நான் சாகலாம்;
நாங்கள் சாகக்கூடாது.”
நன்றி.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் ச.சிவயேகநாதன்.
