“நீதியும் பொறுப்புக்கூறலும் எமது பணி அல்ல” – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்
காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் மனிதாபிமான உதவிகள் மாத்திரமே எம்மால் செய்ய முடியும்.
சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் தெளிவுபடுத்தல்
மட்டக்களப்பு | 01 செப்டெம்பர் 2026
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையைக் கண்டறிதல், நீதியைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபடாது என, இலங்கைக்கான அதன் வதிவிடப் பிரதிநிதி பிறிசிலா அவ்சி தெரிவித்ததாக கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச. சிவயோகநாதன் மற்றும் ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லூக்ஜோன் ஆகியோர் இன்று (01.09.2026) மாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பு ஊறணி மன்றேசாவில் அமைந்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் பிறிசிலா அவ்சி அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
OMP தொடர்பில் கேள்வி
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவகாரத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் உள்ளகப் பொறிமுறைகளில் ஒன்றான காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துடன் (OMP) நெருக்கமாகப் பணியாற்றுவது தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகளால் கவலை வெளியிடப்பட்டது.
சர்வதேச நீதியைக் கோரி நீண்டகாலமாகப் போராடி வரும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு, இவ்வாறான உள்ளகப் பொறிமுறைகளுடனான நெருக்கமான செயற்பாடுகள் சர்வதேச நீதிக்கான அவர்களின் கோரிக்கையை வலுவிழக்கச் செய்யக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அரசபடையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் மீண்டும் பதிவு செய்யப்படுவதன் மூலம் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற பதிவுகள் வடக்கு, கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதற்கான ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்படக்கூடிய அபாயம் உள்ளதாகவும், அவ்வாறான செயற்பாடுகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் துணைபோகக்கூடாது எனவும் சிவில் சமூக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
பொறுப்புக்கூறல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது
இதன்போது, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக எதிர்காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி சார்ந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டால், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அவற்றில் பங்கேற்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வதிவிடப் பிரதிநிதி, தங்களது நிறுவனக் கொள்கையின் அடிப்படையில் அவ்வாறான பொறுப்புக்கூறல் நிகழ்வுகளில் தங்களால் பங்கேற்க முடியாது எனத் தெளிவுபடுத்தியதாக சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
“வலிந்து காணாமலாக்கப்பட்டோர்” என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது
இச்சந்திப்பில் மற்றுமொரு முக்கிய விடயமாக, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் பயன்படுத்தப்படும் சொல்லாடல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தங்களது நிறுவனக் கொள்கையின் அடிப்படையில் “வலிந்து காணாமலாக்கப்பட்டோர்” என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது என்றும், அனைவரையும் “காணாமல்போனோர்” என்ற சொல்லாடலிலேயே குறிப்பிட முடியும் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி தெரிவித்ததாக சந்திப்பில் பங்கேற்றவர்கள் கூறினர்.
இது காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களின் நீண்டகால நீதிக்கோரிக்கையுடன் தொடர்புடைய முக்கியமான விடயமாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பு
அதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மனிதாபிமான மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்காக தேசிய நிறுவனமான சர்வோதயத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.
காணாமல்போனவர்களைத் தேடுதல், குடும்பங்களுக்கான உளவள ஆற்றுப்படுத்தல், வாழ்வாதார உதவிகள் மற்றும் ஏனைய மனிதாபிமான தேவைகளுக்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பினர் இணைந்து செயற்படுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
“நீதிக்கான போராட்டத்தில் சர்வதேச தலையீடு அவசியம்”
எனினும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் ஆகியவை வெறுமனே மனிதாபிமானப் பிரச்சினையாகக் கருதப்பட முடியாது எனவும், அவை நீதி மற்றும் மனித உரிமைகளுடன் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் எனவும் கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், அவர்களின் சர்வதேச நீதிக்கான கோரிக்கைக்கு சர்வதேச மட்டத்தில் வலுவான ஆதரவும் தலையீடும் அவசியம் எனவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம்
மட்டக்களப்பு
01.09.2026
