ரஷ்யா தொடர்ந்து ஆறாவது நாளாக உக்ரைனின் தலைநகரைத் தாக்கியது. இதில், கீவ் நகரில் உள்ள தொடருந்து நிலைய களஞ்சியக் கிடங்கு மீது நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் 6 பேர் எங்கள் ஊழியர்கள். எங்கள் சக ஊழியர் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று உக்ரைனின் அரசுக்குச் சொந்தமான தொடருந்து வலையமைப்பான உக்ர்சலிஸ்னிட்சியாவின் தலைமை நிர்வாகி ஒலெக்சாண்டர் பெர்ட்சோவ்ஸ்கி கூறினார்.
இத்தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரவு நேரத் தாக்குதல்களின் போது தலைநகரின் பல பகுதிகளில் தீ பரவியதில், கீவ் நகரில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அவசரகால சேவைகள் தெரிவித்தன.
கீவ் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளில், போரிஸ்பில்லில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர்.
கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய தொடர்ச்சியான ஆறாவது நாள் தாக்குதல்களின் தொடர்ச்சி இதுவாகும்.
