தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.
இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.
இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் வி.சி.க. ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு விஜய்க்கு கிடைத்தது. இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தற்போது பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருப்பதால் விரைவில் கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை விஜய் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்ற விஜய்யை அக்கட்சியின் மாநில தலைவர் சண்முகம், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் கலந்துரையாடினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தனக்கு ஆதரவு அளித்ததற்கு விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார் எனவும், ஆட்சியில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டு அதனை நீங்கள் சுட்டிக்காட்டினால் உடனடியாக அதை சரிசெய்வேன் என்று விஜய் உறுதி அளித்தார் எனவும் தெரிவித்தார்.
த.வெ.க.வுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களை விஜய் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.
