தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினை அடுத்து வைத்தியசாலைக்கு சென்ற வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் , பணிப்பாளருடன் நிலைமைகளை கேட்டறிந்த போதே பணிப்பாளர் அவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட மருந்துகளை உடனடியாகப் பொருத்தமான இடத்துக்கு மாற்றியமை மற்றும் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து பணிப்பாளர் ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பணிப்பாளர், மருத்துவமனையின் உள்ளக மருந்துக் களஞ்சியத்திலிருந்தும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்தும் தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த தீயணைப்பு வீரர்கள், படையினர் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகள் மருத்துவமனையால் முன்னெடுக்கப்படும் எனவும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதன்போது ஆளுநருக்கு உறுதியளித்தார்.
