ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகையைச் சமாளிக்க, மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் போதிய அளவில் தயாராக இல்லை என அவசர மருத்துவக் கல்லூரி வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.
ஆஸ்திரேலிய அவசர மருத்துவக் கல்லூரி (ACEM) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 2023–2024ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சுமார் 90 இலட்சம் பேர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். இவர்களில் நான்கில் ஒருவர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
இந்த வயதுப் பிரிவினரில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 70 சதவீதம் பேருக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டதுடன், 50 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட நேரம் காத்திருப்பதும் அதிகரித்துள்ளது. 2018–2019ஆம் ஆண்டில் 15,084 ஆக இருந்த, 24 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த முதிய நோயாளிகளின் எண்ணிக்கை, 2023–2024ஆம் ஆண்டில் 53,510 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய முதிய நோயாளிகளில் 54 சதவீதம் பேர் மட்டுமே எட்டு மணி நேர இலக்கிற்குள் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகையில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் விகிதம் தற்போது 17.8 சதவீதமாக உள்ளது. இது 2066ஆம் ஆண்டுக்குள் 24.8 சதவீதமாக அதிகரிக்கும் என அந்நாட்டின் மத்திய கருவூல அறிக்கை கணித்துள்ளது.
அத்துடன், 2050ஆம் ஆண்டுக்குள் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரின் அவசர சிகிச்சைப் பிரிவு வருகைகள் 411 சதவீதம் அதிகரிக்கலாம் என அவசர மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ACEM தலைவர் பீட்டர் அல்லேலி கருத்துத் தெரிவிக்கையில், அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகையைச் சமாளிக்க ஆஸ்திரேலியாவின் சுகாதாரக் கட்டமைப்பும் மருத்துவப் பணியாளர்களும் போதிய அளவில் தயாராக இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, மருத்துவமனைகளுக்கும் முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், சுகாதாரத் துறைக்கான நிதியை அதிகரித்தல் மற்றும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பரிந்துரைகளை அறிக்கை முன்வைத்துள்ளது.
