இந்திய மீனவர்கள் விடயத்தில் இலங்கை அரசோ அதன் கடற்றொழில் அமைச்சரோ விசுவாசமாக நடக்கவில்லையென இந்திய அரசு குற்றச்சாட்;டுக்களை முன்வைத்துவருகின்றது.குறிப்பாக இலங்கை கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் இந்திய அரசை புறந்தள்ளி வருவதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் சீற்றங்கொண்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெகுவிரைவில் தீர்க்கமான ஒரு தீர்மானத்தை இருத்தரப்புக்கும் இடையே எடுக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவைப் பாதிக்கும் வகையில் அமையும் எல்லை தாண்டிய பிரச்சினைக்கு, மோதல்கள் இன்றி இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் வெளிவிவகார அமைச்சு உறுதியாக உள்ளது.
இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதால் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் இந்தியத் தரப்பிற்குத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றது” எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
