உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவுச் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) இணை நிறுவுநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங்கை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில், அந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான கூட்டம் புதன்கிழமை நடைபெற்றதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக என்விடியா நிறுவனத்தை வழிநடத்தி வரும் ஹுவாங், அதனை ஒரு சாதாரண கணினி விளையாட்டுச் சிப் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான சிப்களின் முன்னணி விநியோகஸ்தராக வளர்த்தெடுத்துள்ளார்.
இந்நிலையில், சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அமெரிக்க உளவுத்துறையால் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் ஹுவாங் தொடர்பு வைத்திருந்ததாக வெளியான தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதன் பின்னணியில், வெளிநாட்டு உளவு முயற்சிகளால் அவர் குறிவைக்கப்பட்டாரா என்பது குறித்தும் என்விடியா நிறுவனம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தனக்குக் கீழ் பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாகி ஒருவருடனும் ஹுவாங் முறையற்ற உறவு வைத்திருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, என்விடியா நிறுவனத்தின் பங்குகள் சந்தைக்குப் பிந்தைய வர்த்தகத்தில் சுமார் எட்டு சதவீதம் சரிவடைந்துள்ளன.
இதற்கிடையில், ஹுவாங்கிற்குப் பதிலாகப் பொறுப்பேற்கக்கூடிய சாத்தியமான வாரிசுகளை அடையாளம் காண்பதற்காக வெளிப்புற நிறுவனமொன்றுடன் என்விடியாவின் நிர்வாகக் குழு இணைந்து செயல்பட்டு வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. நிரந்தரத் தலைமைச் செயல் அதிகாரியை நியமிக்கும் வரையில் இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மறுபுறம், சீனாவுக்கான என்விடியாவின் சிப் ஏற்றுமதிகள் மற்றும் ஹுவாங்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய உறவு குறித்த பதிவுகளைப் பாதுகாக்குமாறு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் செனட்டர்களான எலிசபெத் வாரன் மற்றும் கிறிஸ் கூன்ஸ் ஆகியோர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், ஊழியர்களுக்கு அனுப்பிய குறிப்பொன்றில் தனது மனைவிக்குத் துரோகம் செய்ததை ஹுவாங் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரை அவர் வெளியிடவில்லை. சீன உளவுத்துறையுடன் அந்தப் பெண்ணுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைப் பெய்ஜிங் நிராகரித்துள்ளது.
இதேவேளை, கூறப்படும் உறவு விவகாரத்தையும் அதனால் நிறுவனத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களையும் மறைத்ததாகக் குற்றஞ்சாட்டி, என்விடியா நிறுவனம் மற்றும் ஹுவாங் ஆகியோருக்கு எதிராகப் பங்குதாரர்கள் கூட்டாக வழக்குத் தொடர முன்மொழிந்துள்ளனர்.
இரண்டாவது முறையற்ற உறவில் தொடர்புடையவராக என்விடியாவின் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவின் துணைத் தலைவர் கிம்பர்லி பவல் அடையாளம் காட்டப்பட்டுள்ளார். எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் என்விடியாவும் சம்பந்தப்பட்ட அதிகாரியும் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
