எழுத்தாளரும் , கவிஞருமான , ‘பாவலர்மணி’ திருமதி கீத்தாராணி பரமானந்தன்
அவர்களின் இரு நூல்களின் வெளியீட்டு விழா ‘யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின்’
ஆதரவில் யேர்மனியில் கேவலார் நகரில் கடந்த 19 – 09 – 2026 அன்று
மிகச் சிறப்பாக நடைபெற்றது . அவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து மடலை –
வாசித்து அவரிடம் கையளித்திருந்தேன் . அந்த வாழ்த்துக் கவிதையும்
அரங்கிலெடுக்கப்பட்ட சில நிழற்படங்களும் கீழே . . .!
வாழ்த்து மடல்
காலம் : 19 – 09 – 2026 இடம் : யேர்மனி
கவிஞரும் எழுத்தாளருமான திருமதி கீத்தாராணி பரமானந்தன் அவர்களின்
இருநூல்களின் வெளியீட்டு விழாவின்போது அவரை வாழ்த்தி வழங்கப்பட்டது .
கூட்டைத் துறந்த குருவிகள் போலவே
நாட்டைத் துறந்தோம் நாட்களும் கடந்தன !
கூட்டை யிழந்தும் கூவிட மறந்தோமா ?
நாட்டின் நிலைமை நலிவினைத் தந்ததால்
ஏட்டினைத் திறந்தே யெழுத்தினை வடித்துப்
பாட்டின் இனிமையில் படுதுயர் மறந்தோம் .
பூக்களின் வாசமாய்ப் பொலிவுறும் வகையில்
பாக்கள் புனைபவர் பாவலர் கீத்தா !
யாப்பினை முறையாய் ஏற்புறக் கற்றதால்
தோப்பின் குளிர்ச்சி துலங்கிடும் பாக்களில் !
பாவலர் பள்ளியில் பயின்ற பான்மையால்
பூவிரி சோலையின் பூக்களாய்க் கவிதைகள் .
மரபினைக் கற்றதால் மாண்பினைப் பெற்றுத்
தரமா யெழுதியே தரணியில் நிமிர்ந்தார் .
வாழ்வியல் காட்டும் வண்ணக் கவிதைகள்
தாழ்விலா நிலையைத் தரணியில் தந்திடும் .
மானிட விழுமியம் மண்ணில் நிலைத்திட
வானமாய்ப் பொழிபவர் வளர்தமிழ்ப் புலவராம் !
மரபு கவிதைகள் மாக்கடல் போன்றவை ;
கரையதைக் கண்டிடக் கற்றிட வேண்டுமே
கீத்தா கவிதைகள் கீர்த்தி மிகுந்தவை
ஆத்தா ளருளா லதையவர் பெற்றார் .
பாவலர் மணியாய்ப் பாங்குற வளர்ந்து
நாவல ரானார் நானிலம் போற்றிட ,
விருத்த மாயிரம் விருப்புடன் நெய்ததால்
விருதினைப் பெற்றார் வியந்தது உலகு !
கருத்துடைப் பாக்கள் கவினுறத் தோன்றிடப்
பெருமைகள் பெற்றே பீடுற வாழ்பவர் ;
கணவன் தன்னொடு களிப்புற வாழ்ந்திட
மணங்கமழ் வாழ்த்தை மகிழ்வுறத் தந்தேன் .
ஆழிசூழ் உலகை யன்பினால் பிணித்து
நாழிகை தோறும் நற்கவி படைத்து
வாழிய ! வாழிய ! வளத்துடன் பல்லாண்டு .
அன்புடன் – வாழ்த்துவது இரா . சம்பந்தன் – யேர்மனி
