……
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழுவினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய கௌரவமான யாழ். விருது, 2026 ஆம் ஆண்டில் தகைசால் பேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் ஓய்வுநிலைப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளரும் சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான அரவிந்தராஜ் தலைமையில் நேற்று நடைபெற்ற சைவ சமய விவகாரக் குழுவின் மகாசபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ் மொழி, சைவ சமயம், கல்வி மற்றும் சமூகப் பணிகள் ஆகிய துறைகளில் பேராசிரியர் தம்பதிகள் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டி, இவ்வாண்டுக்கான யாழ். விருதை அவர்களுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக் குமரன் மலர் வெளியீட்டு நிகழ்வில், இந்த விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவுள்ளது.
கல்வி, ஆய்வு மற்றும் சமயப் பணிகளில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து பங்களித்து வரும் பேராசிரியர் தம்பதிகளுக்கு வழங்கப்படவுள்ள இந்தக் கௌரவம், கல்வியாளர்கள் மற்றும் சைவ சமய ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
