காலி, கங்காதிலக விகாரைக்கு அருகில் உள்ள புகையிரதப் பாதை ஓரத்தில் இளம் பெண் ஒருவரின் சடலம் கிடந்த இடத்திற்கு அருகில், அவளது கைப்பேசி திடீரென ஒலிக்கத் தொடங்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த காலி பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த அழைப்பை ஏற்று, “யார் பேசுவது?” என்று கேட்டபோது, மறுமுனையில் ஒலித்தது அவளது கணவனின் குரலாகும். தன் மனைவியையும் தன்னையும் உலுக்கிய அந்தப் பேரவலம் குறித்து கணவன் கேள்வியுற்ற முதல் தொலைபேசி அழைப்பு அதுவேயாகும்.
பெலியத்தை வீட்டைச் சேர்ந்தவரும், காலி கராப்பிட்டிய மருத்துவ பீடத்தில் கல்வி கற்றிட்ட 24 வயதுடைய யுத்மினி என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். அவளது மரண விசாரணை, அவள் எதிர்கொண்ட கல்விச் சுமை மற்றும் கடுமையான மன அழுத்தம் குறித்த பல அதிர்வு தரும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. அதேசமயம், அவள் தனது பெற்றோருக்கும் கணவனுக்கும் அனுப்பிய இறுதிச் செய்திகள் இந்தத் துயரத்தின் மௌன சாட்சிகளாக மாறியுள்ளன.
மாலிம்பாட பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணியாற்றும் உயிரிழந்த மாணவியின் தந்தை காலி அவசர மரண விசாரணை அதிகாரி முன்பு சாட்சியமளித்தார். உயர்தரப் பரீட்சையில் மூன்றாம் முறை தோற்றி மருத்துவ பீட்டிற்குத் தெரிவாகி, அதன் நான்காம் ஆண்டில் அவள் படித்து வந்துள்ளார். 23 வயதுடைய விசரத என்பவரை, இரு தரப்பினரின் விருப்பத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது திருமணத்தைப் பதிவு செய்திருந்தார். குடும்பத்தில் எந்தவிதத் தகராறுகளோ வன்முறைகளோ இருக்கவில்லை.
குடும்பச் சண்டை எதுவும் இல்லாவிட்டாலும், அதிகமான கல்விச் சுமை அவளது வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்திருந்தது. “வேலை ரொம்ப அதிகமாக இருக்குமா, ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு, மனசுக்கு நிம்மதியா கோயிலுக்குப் போயிட்டு வரணும்” என்று அண்மையில் தன் தாயாரிடம் அவர் கூறியுள்ளார். அதன்பின்னர் கணவர் அவரை கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அளவுக்கு அதிகமான வேலைப் பளு காரணமாகத் தனியாக இருந்து படிக்க விரும்புவதாக ஒரு வாரத்திற்கு முன்பு தனது கணவரிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 02 அன்று கிந்தொட்டைப் பகுதியில் நடைபெற்ற சமூக நலச் சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்ட யுத்மினி, அன்று பிற்பகல் 2:30 மணியளவில் தனது கணவரைச் சந்தித்தபோதும் தன்னைத் தனியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். மாலை 5:30 மற்றும் இரவு 10:22 மணிக்கு கணவருக்கு குறுஞ்செய்திகளை அனுப்பிய அவர், அதில், “நான் நீங்க படித்து நல்ல இடத்திற்கு வருவதற்காகக் காத்திருக்கிறேன். பத்திரமா இருங்க டியர்” என்று குறிப்பிட்டிருந்தார். (இச்செய்தியைக் கணவர் மறுநாள் காலையில்தான் பார்த்தார்). அன்றைய தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் தனது தந்தையின் கைப்பேசிக்கு, அப்பா ஐ லவ் யூ, அம்மாவைக் கவனித்துக் கொள்ளுங்கள் என உருக்கமான செய்தியை அனுப்பியுள்ளார்.
நவம்பர் 3 ஆம் திகதி அதிகாலை 3:30 மணியளவில் இந்தக் குறுஞ்செய்தியைக் கண்ட பெற்றோர்கள் உடனடியாகத் தமது மகளுக்குத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அவள் பதிலளிக்கவில்லை. பதறிப்போன தந்தை காலை 6:00 மணிக்குள் கராப்பிட்டிய மருத்துவ பீட விடுதிக்குச் சென்றபோதிலும் மகள் அங்கு இல்லை. தோழிகளுக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. காலை 7:30 மணியளவில் விடுதியில் யுத்மினி இல்லை என்று தோழி ஒருவர் தெரிவிக்க, கணவர் அவளுக்குத் தொடர்ந்து அழைப்புகளை ஏற்படுத்தினார். காலை 9:45 மணியளவில் அந்த அழைப்புக்குப் பதிலளித்த பொலிஸ் அதிகாரி, உடனடியாக காலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தினார். அப்போதுதான், காலை 7:30 மணியளவில் கிந்தொட்டை ரயில் பாதை ஓரத்தில் யுத்மினியின் சடலம் மீட்கப்பட்ட செய்தி புகையிரதப் பரிசோதகரால் தெரியவந்தது. தந்தையின் சாட்சியத்தின்படி, தனது மகளின் மரணம் குறித்து தனக்கு எந்தச் சந்தேகமில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து காலி பொலிசார் சிறப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் இருந்து காலி நோக்கிச் சென்ற புகையிரதத்தில் அடிபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் அவதானிக்கப்பட்டாலும், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் இயங்கிய எந்தவொரு புகையிரதச் சாரதியும் மோதலை நேரடியாகப் பார்க்கவில்லை. இதன் காரணமாக அவள் எந்தப் புகையிரதத்தால் விபத்துக்குள்ளானாள் என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.
காலி தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டாக்டர். எச்.டி. வீரரத்னவின் அறிக்கை மற்றும் சாரதிகளின் மேலதிக சாட்சியங்களின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, காலி அவசர மரண விசாரணை அதிகாரி காமினி குலசிங்க இந்த மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பை வழங்கினார். மருத்துவராகும் கனவுடன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே, ரயில் பாதை ஓரத்தில் அவள் எடுத்த இந்த மௌனப் பயணம், தீர்க்கப்படாத பல கேள்விகளுடன் எப்போதுமாக நின்றுவிட்டது.
இளம் வயதில் யுத்மினியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கணவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
