திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீண்டகாலமாக போதிய மழைவீழ்ச்சி இல்லாத நிலையில், குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இப்பகுதியை நம்பி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், குளத்து நீரை கால்நடைகளுக்காக பயன்படுத்தி வந்த கால்நடை வளர்ப்பாளர்களும் கடுமையான நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர். குளம் முற்றாக வறண்டு போகும் நிலை ஏற்பட்டால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, நிலவும் வரட்சியான காலநிலையை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர் மற்றும் நீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர் பிரதேசத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, பல குளங்கள் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதால் கால்நடைகள் நீருக்காகவும், தீவனத்திற்காகவும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன.
மூதூர், தோப்பூர் பிரதேசத்திலுள்ள பம்மான்குளம், இத்திக்குளம், மறவட்டகுளம் உள்ளிட்ட பல குளங்கள் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
அதேவேளை, மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து கருகியுள்ளதால், கால்நடைகள் உணவு மற்றும் நீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
என்றுமில்லாத வகையில் இம்முறை கடும் வறட்சி நிலவி வருவதால், கால்நடைகளின் உயிரிழப்பு மற்றும் கால்நடை வளர்ப்பின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாக மூதூர் , தோப்பூர் பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகளுக்கான குடிநீர் மற்றும் அவசர தீவன வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
