பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளை தவிசாளர் மற்றும் உறுப்பினர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றை தவறாக வழிநடத்தியுள்ளார் எனவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநரால் முன்னெடுக்கப்படவிருந்த விசாரணையை இரத்துச் செய்யக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுதாரர்களின் ஆரம்பச் சமர்ப்பணங்களை ஏற்று மன்று அன்றைய தினம் இடைக்காலத் தடைக் கட்டளை வழங்கப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, வடமாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி கடந்த 11ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில், மன்றில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.
இவ்வாறான எழுத்தாணை வழக்குகள் அனுமதிக்கப்படுவது அரச இயந்திரத்தின் செயற்பாட்டை முடக்கும். மக்கள் பிரதிநிதிகளே என்றாலும் அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு முடிவுக்கு வர வேண்டுமே தவிர, அவை விசாரணையின் முன்னரே தடுக்கப்படக்கூடாது என மன்றில் வாதிட்டார்.
அத்துடன் மனுதாரர் நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தியுள்ளமை தொடர்பிலும் தனது ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.
மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இடைக்காலத் தடைக் கட்டளையை நீடிக்கக் கோரி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.
அதேவேளை, ‘ஆளும் தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், இவ்விசாரணை தொடர்பான வர்த்தமானி பிரசுரிக்கப்படுவதற்கு முன்பாகவே அது பற்றி அறிந்திருந்து கருத்து வெளியிட்டார்’ என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பத்தில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆயினும், குறித்த விசாரணை தொடர்பான விடயம் வர்த்தமானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தமையை மன்றில் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், மனுதாரர் மன்றைத் தவறாக வழிநடத்தியே குறித்த இடைக்கால நிவாரணத்தைக் கோரியிருந்தமை தொடர்பில் மன்று திருப்திப்படுகிறது
சட்ட ஏற்பாடுகளின்படி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை நீதிமன்றம் தன்பொறுப்பில் எடுத்து விசாரணையை மன்றில் முன்னெடுக்க முடியாது. சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்
மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் அவர்களும் உரிய பொறுப்புக்கூறலைக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்த மன்று, மனுதாரர்களால் பெறப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை இரத்து செய்ததுடன் ஆளுநரின் விசாரணையை முன்னெடுப்பதற்குரிய அனுமதியை வழங்கி வழக்குகளை முழுமையாகத் தள்ளுபடி செய்தது.
