ஆஸ்திரேலிய இசைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் ARIA விருதுகளின் 40ஆவது விருது விழாவில், நான்கு முக்கிய விருதுகளை வென்று சர்வதேச இசை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் எக்கா வாண்டல் (Ecca Vandal)
இன்று ஆஸ்திரேலியாவின் முன்னணி இசைக் கலைஞர்களில் ஒருவராகத் திகழும் எக்கா வாண்டலின் பின்னணியில் இருப்பது இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு தமிழ்க் குடும்பம்!
எக்கா வாண்டலின் இயற்பெயர் ரெபெக்கா வாண்டல் (Rebecca Vandal).
இவர் தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் அமைந்துள்ள லூயிஸ் ட்ரிச்சார்ட் என்ற சிறிய நகரில்தான் பிறந்தார்.
இவரது பெற்றோரும் இரண்டு மூத்த சகோதரிகளும் இலங்கையில் பிறந்தவர்கள். இவரது குடும்பம் ஈழத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தது.
தனது குடும்பத்தின் தமிழ்ப் பின்னணியையும் தென்னாப்பிரிக்காவில் பெற்ற அனுபவங்களையும் தனது இசை வளர்ச்சியின் முக்கியமான பகுதிகளாகக் கருதுகிறார் எக்கா.
எக்கா வாண்டலின் குடும்பப் புலம்பெயர்வு வரலாறு மிகவும் சுவாரசியமானது.
அவரது தந்தைக்குத் தென்னாப்பிரிக்காவில் வேலைவாய்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பெற்றோரும் அவரது இரண்டு சகோதரிகளும் இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர்.
அந்தக் காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொள்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அரசியல் சூழல்களால், குடும்பம் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தது.
1990களின் முற்பகுதியில், எக்கா சிறுமியாக இருந்தபோது, குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு ஏற்கெனவே குடியேறியிருந்த தங்களது உறவினர்களுடன் இணைந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.
மெல்பேர்னில் வளர்ந்த எக்கா வாண்டல், சிறுவயதிலிருந்தே இசை நிறைந்த குடும்பச் சூழலில் வாழ்ந்தார்.
அவரது பெற்றோர், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் பலரும் இசையில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர்.
வீட்டில் ஒலித்த கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் இலங்கைத் தமிழ் இசை பாடல்கள் அவரது இசை ரசனையை வளர்த்தன.
ஆரம்பத்தில் வயலின் மற்றும் பியானோ போன்ற இசைக்கருவிகளைக் கற்றுக்கொண்டார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் வணிகவியல் துறையில் கல்வியைத் தொடரவே அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவரது இசைத் திறமையைக் கவனித்த ஆசிரியர் ஒருவர், மெல்பேர்னில் உள்ள Victorian College of the Arts நிறுவனத்தில் ஜாஸ் இசைப் பிரிவில் சேருமாறு பரிந்துரைத்தார்.
அந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு, அங்கு இசைக் கல்வியைத் தொடர்ந்தார்.
குடும்பத்தின் எதிர்பார்ப்புகளிலிருந்து மாறுபட்ட பாதையாக இருந்தாலும், இசையின் மீதான தனது ஆர்வத்தில் உறுதியாக நின்று தனக்கான எதிர்காலத்தை உருவாக்கினார்.
ஜாஸ் இசையில் முறையான பயிற்சி பெற்ற எக்கா வாண்டல், பின்னர் Punk Rock, Hip-Hop, Rap மற்றும் Alternative Rock போன்ற இசை வடிவங்களை இணைத்து வித்தியாசமான இசை அடையாளத்தை உருவாக்கினார்.
2014ஆம் ஆண்டு ‘White Flag’ பாடலின் மூலம் இசைத்துறையில் கவனம் பெற்றார்.
தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தனது முதல் முழுநீள இசைத் தொகுப்பை வெளியிட்டார்.
அவரது தனித்துவமான குரல், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளிப்பாடுகள் ஆஸ்திரேலியாவைத் தாண்டி சர்வதேச ரசிகர்களையும் ஈர்த்தன.
Limp Bizkit, Deftones உள்ளிட்ட சர்வதேச இசைக் குழுக்களுடன் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றதுடன், 2026ஆம் ஆண்டு புகழ்பெற்ற Coachella இசை விழாவிலும் நிகழ்ச்சி வழங்கினார்.
சுமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், 2026 மே 22ஆம் திகதி தனது இரண்டாவது முழுநீள இசைத் தொகுப்பான ‘Looking For People to Unfollow’ என்பதை வெளியிட்டார்.
17 பாடல்களைக் கொண்ட இந்த இசைத் தொகுப்பு Punk Rock, Hip-Hop, Hardcore மற்றும் Electronic இசை வடிவங்களின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆல்பம் இசை விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதன் மூலம் 2026ஆம் ஆண்டுக்கான 22ஆவது Soundmerch Australian Music Prize விருதையும் வென்றார்.
இந்த விருதுடன் 50,000 ஆஸ்திரேலிய டொலர் பரிசுத் தொகையையும் பெற்றுக்கொண்டார்.
2026 நவம்பர் 18ஆம் திகதி நடைபெற்ற 40ஆவது ARIA விருது விழாவில் எக்கா வாண்டல் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
அவற்றில் நான்கு விருதுகளைத் தனதாக்கி சாதனை படைத்தார்.
அவர் வென்ற விருதுகள்:
1. Michael Gudinski Breakthrough Artist.
2. Best Independent Release.
3. Best Alternative Release.
4. Best Cover Art.
குறிப்பாக, ARIA விருது விழாவில் முதன்முறையாக மேடையேறிய அவர், தனது இசை நிகழ்ச்சியாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இலங்கையில் பிறந்த பெற்றோருக்குத் தென்னாப்பிரிக்காவில் பிறந்து, பின்னர் ஆஸ்திரேலியாவில் வளர்ந்து, உலக இசை மேடையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ள எக்கா வாண்டலின் பயணம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
குடும்பத்தின் பாரம்பரியப் பின்னணி, பல்வேறு கலாசாரங்களின் இசை அனுபவம், கல்வி மற்றும் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் என அனைத்தையும் தனது இசையின் பலமாக மாற்றியுள்ளார்.
ஈழத்துத் தமிழ் வேர்களைக் கொண்ட ஒரு பெண், ஆஸ்திரேலிய இசை உலகின் முக்கிய விருது மேடையில் நான்கு விருதுகளைக் கைப்பற்றியிருப்பது உலகத் தமிழர்களும் பெருமை கொள்ள வேண்டிய சாதனையாகும்!
