யாழ்ப்பாணம் – கொக்குவில், பிரம்படி பகுதியில் இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களது 39வது ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய தூதரகத்திற்கஞ்சி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் கட்சி தலைவர்கள் பலரும் நினைவேந்தலில் பங்கெடுக்காது தலைமறைவாகியிருந்தனர்.
கொக்குவில் பிரம்படியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அருகில் நினைவேந்தல் நடைபெற்றது.
படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.
