இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை படகு ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 41 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதியாரா செந்தோசா 2 என்ற படகு, இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபயாவிலிருந்து, ஜாவா கடலைக் கடந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசருக்கு மொத்தம் 271 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி 225 பேர் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மீட்புப் பணி இன்னும் தொடர்வதாகவும் தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில பயணிகள் கடலில் குதித்ததாகவும், அவர்களை அருகிலிருந்த கப்பல் ஒன்று மீட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் நான்கு கப்பல்கள் அருகிலேயே தயார் நிலையில் இருந்தன, ஆனால் படகில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் ஏற்பட்ட அபாயம் காரணமாக அவற்றால் நெருங்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
