யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று (23) கொட்டும் மழைக்கு மத்தியிலும் 27ஆவது வாரமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலிட்டி பகுதியில் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களாவுக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் வடக்கின் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், 1990ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர், குறித்த பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பேணப்பட்டு வருகின்றன.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், குறித்த பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறாததால், தமது காணிகளை மீளப் பெற முடியாத நிலை தொடர்வதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது காணிகளை விடுவிக்குமாறு பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வரும் மக்கள், இதுவரை காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தனர்.
அதற்கமைய, கடும் மழையையும் பொருட்படுத்தாது இன்று 27ஆவது வாரமாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
