மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது, மண்டை ஓடுகள் உள்ளிட்ட என்புத் தொகுதிகள் உள்ளடங்களாக பல்வேறுபட்ட பொருட்கள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் மனித எச்சங்கள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று (14) நிறைவடைந்த நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, கடந்த ஒக்டோபர் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் முன்னெடுக்கப்பட்டு நேற்று நிறைவடைந்துள்ளன.
இந்த அகழ்வின்போது மனித எச்சங்களாக இருக்கக்கூடிய மண்டை ஓடுகள், என்புத் தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அறிவியல் ஆய்வுகளுக்காக சட்ட வைத்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளின்போது குறித்த நிலப்பகுதி செயற்கையான கட்டமைப்பு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் கொட்டப்பட்டு, நிலப்பகுதி செயற்கையான முறையில் மறைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குப்பைகளை அகற்றிய பின்னரே அவற்றின் அடிப்பகுதியில் இருந்து என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், மனித எச்சங்கள் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், குறித்த பகுதி குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடமாக இருக்கக்கூடும் என்பதற்கான பல்வேறு காரணிகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தச் சந்தேகங்களை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக அறிவியல் ஆய்வுகளும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் அவசியமாகும்.
அகழ்வுப் பணிகளை முன்னெடுத்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் ஆய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்ற பின்னரே, கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான முழுமையான விவரங்களை வெளியிட முடியும் என சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கைகள் பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
