சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்
புவியியல் காண்
வொஷிங்டன்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதுவரை நீதிமன்றத்தின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் சில அமைப்புகள் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது, நீதிமன்றத்தையே நேரடியாகக் குறிவைத்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கும் அதன் குடிமக்களுக்கும் எதிராகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்துடனான சில நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளைத் தடை செய்வதாக ரூபியோ தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடத்தும் விசாரணைகளையும், காசா தொடர்பாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள கைது உத்தரவுகளையும் அமெரிக்கா தனது நடவடிக்கைக்கான காரணங்களாகக் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உலகின் மிகக் கடுமையான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வழக்குத் தொடரும் அமைப்பாகும். இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது அதன் முக்கிய பணியாகும்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் சட்டத்தில் உறுப்பினர்களாக இல்லை. இருப்பினும், நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் சில குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு எதிராகவும் விசாரணை நடத்த முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய தடைகளைக் கண்டித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தனது பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடுகளைப் பாதுகாக்குமாறு உறுப்பு நாடுகளிடமும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்ற தகவல் அறி
இந்தத் தடைகள் சர்வதேசச் சட்டத்தையும் சுதந்திரமான நீதித்துறையையும் பாதிக்கக்கூடும் என மனித உரிமை அமைப்புகளும் சட்ட நிபுணர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்கக் குடிமக்கள் நீதிமன்றத்துடன் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதிப்பதாகக் கூறி, சில உரிமை அமைப்புகள் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு முக்கியமானதாக இருக்கும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
