சர்ச்சைக்குரிய அபியேய் பிராந்தியத்தில் உள்ள அமியட் சந்தையில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 153 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலால் சுமார் 8,000 பேர் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் தகவலின்படி, நேற்று முன்தினம் திங்கட்கிழமை நண்பகல் வேளையில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்ட அமியட் சந்தையை இலக்குவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 73 ஆகக் கணிக்கப்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை, நேற்று செவ்வாய்க்கிழமைக்குள் 153 ஆக உயர்ந்துள்ளது.
புவியியல் காண்
அபியேய் பிராந்தியத்தின் தற்காலிக தகவல் துறை அமைச்சர் யோஹானா அகோல் என்கோர், இத்தாக்குதலுக்கு சூடானின் இராணுவமே பொறுப்பு எனக் குற்றம் சாட்டியுள்ளார். தெற்கு சூடானின் வெளியுறவு அமைச்சகமும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
சந்தையைச் சுற்றியுள்ள பல இடங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் எரிபொருள் கிடங்கும் தாக்கப்பட்டதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருந்ததுடன், செவ்வாய்க்கிழமையும் தீ தொடர்ந்து எரிந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமியட் பெக் மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்து வருவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரும் தீக்காயமடைந்தவர்களும் அடங்குவதாகவும் அந்த அமைப்பின் மருத்துவச் செயல்பாடுகள் மேலாளர் டாக்டர் கிறிஸ்டியன் லிண்டாவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலைத் தொடர்ந்து சூடானின் தூதரை அழைத்து எதிர்ப்புத் தெரிவித்த தெற்கு சூடான் அரசு, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு சூடானை வலியுறுத்தியுள்ளது.
எண்ணெய் வளம் நிறைந்த அபியேய் பிராந்தியத்தின் அரசியல் நிலை குறித்த சர்ச்சை பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. 2005ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்திலும், 2011ஆம் ஆண்டு தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றபோதும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. பிராந்தியத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட பொதுவாக்கெடுப்பு, வாக்களிக்கத் தகுதியானவர்கள் யார் என்ற முரண்பாட்டால் நடைபெறவில்லை.
இதனால், அபியேய் பிராந்தியம் நீண்டகாலமாக நிச்சயமற்ற நிர்வாக நிலையை எதிர்கொண்டு வருகிறது. அங்கு ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
சந்தையைக் காண்
மறுபுறம், 2023 ஏப்ரலில் சூடான் ஆயுதப் படைகளுக்கும் விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே தொடங்கிய உள்நாட்டுப் போர், அண்டைப் பகுதிகளிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. அபியேய் பகுதியில் RSF செயல்படுவதாகச் சூடான் இராணுவம் குற்றம் சாட்டி வரும் நிலையில், அபியேய் மற்றும் தெற்கு சூடான் அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.
சூடான் மோதலில் இரு தரப்பினரும் ட்ரோன்களைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. நீண்டகாலப் போரினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை இத்தகைய தாக்குதல்கள் மேலும் அதிகரிப்பதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
