பெற்றோரின் வழிகாட்டுதலும், கடும் பயிற்சியும் என்னை ஒரு புடம்போடப்பட்ட இசைக்கலைஞராக்கியுள்ளது.
– “தமிழர் மூவர் | நோர்வே -2026” விருதாளர் அதிசயன் சுரேஷ்
– இளையோர்கள் தமது பாதையைத் தாமே சமைக்கவேண்டுமென்பது் சரியானதுதான், ஆனால் சிலவேளைகளில் ஈடுபாட்டுடன்கூடிய பெற்றோரின் வற்புறுத்தல்கள் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவை, என்கிறார் தலைமுறைகளிற்கும் மக்கள் பண்பாடுகளிற்குமிடையில் இசைமூலம் பாலம் அமைக்கும் அதிசயன் சுரேஸ். இல்லையென்றால், இவ்வாறு உங்கள்முன் செவ்வியொன்றை நான் வழங்கிக்கொண்டிருந்திருக்கமுடியாது என்றும் சொல்லிவைக்கத் தவறவில்லை அவர். தனது குருவையும்; வாய்ப்பும் வழியும் காட்டிய ஆசிரியர்களையும், சக இசைக்கலைஞர்களையும் நன்றியுடன் நினைவுகூறுகிறார் இவர். கணிணித்துறையில் நிர்வாகப் பணிபுரிந்துகொண்டே இசைச்சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுவரும் அதிசயன் பற்றி “தமிழர் மூவர் | நோர்வே -2026” தெரிவுக்குழு பின்வருமாறு தெரிவிக்கிறது:
தனது 28 வயதிலேயே இசைத்துறையில் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டவர். ஆற்றல்மிக்க கலைஞர். வயலின் இசையில் முறையான பயிற்சி பெற்றவர், இசையமைப்பாளர்! பாரம்பரிய இசையை மேலைத்தேய இசை வடிவங்களுடனும் நவீன இசையுடனும் இணைத்து, தனித்துவமான இசைகளை உருவாக்கி வருகிறார். நோர்வே தாண்டிப் பல உலக நாடுகளில் வயலின் இசைப் பங்களிப்பினை வழங்கிவருகின்றார்.
நோர்வேஜிய மற்றும் சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். பண்பாடுகளையும் தலைமுறைகளையும் இசையின் மூலம் இணைத்து வரும் இவர் தமிழர் மூவர் 2026இன் விருதாளர்களில் ஒருவர்.
