நமது தமிழர் தாயகமெங்கும் கடந்த 17 ஆண்டுகளில் போதைப்பொருள் பாவனை அபாயகரமான அளவுக்குப் பெருகி வருவதைப் பல்வேறு தரவுகள் எமக்குச் சொல்கின்றன. இதை இனியும் ஒரு சமூகப் பிரச்சினை என்று சொல்லிக் கடந்துபோக முடியாது. இது எம் இனத்தின் வாசலில் நின்று கதவைத் தட்டும் பேரழிவு இது .
அசாத்தியங்களைச் சாத்தியமாக்கிக் காட்டிய ஒரு தலைமுறை வாழ்ந்த மண் இது. உலகமே வியந்து பார்த்த உறுதியோடு நின்றவர்களின் மண் இது. அந்த மண்ணில் அவர்களின் வாரிசுகள் போதையில் தள்ளாடுகிறார்கள் என்ற செய்தி வரும்போது, இவர்களா அவர்கள் என்று மனம் கதறுகிறது. இதைவிடக் கொடிய மன உளைச்சல் நமக்கு வேறென்ன?
எத்தனையோ வீடுகளில் ஒரு தாய் இரவு முழுவதும் வாசலில் காத்திருக்கிறாள். பிள்ளையோ எங்கோ போதையின் பிடியில். ஒரு தந்தை வியர்வை சிந்திச் சேர்த்த பணம், பிள்ளையின் எதிர்காலத்துக்காக அல்ல, அவன் அழிவுக்காகவே கரைகிறது. இந்தக் கண்ணீரை நாம் ஒவ்வொருவரும் எமது கண்ணீராக உணர வேண்டும்
போதை மெதுவாகக் கொல்லும் நஞ்சு. அது கல்வியைக் கொல்லும், கனவுகளைக் கொல்லும், உழைப்பைக் கொல்லும், உறவுகளைக் கொல்லும். இறுதியில் ஒரு இனத்தின் நாளைய நம்பிக்கையையே கொன்றுவிடும். இதைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருப்பதும் இந்த அழிவுக்குத் துணைபோவதேயாகும்
ஆகவே முன்வாருங்கள்
பெற்றோரே, உங்கள் பிள்ளைகளின் அருகில் இருங்கள். ஆசிரியர்களே, ஆலயங்களே, சமூக அமைப்புகளே, விழிப்புணர்வின் குரலாகுங்கள்.
இளைஞர்களே, உங்கள் நண்பனை இந்தப் புதைகுழியிலிருந்து மீட்க உங்கள் கரங்களை நீட்டுங்கள். புலம்பெயர் உறவுகளே, ஊடகங்களே, இந்தப் போராட்டத்தில் தோள் கொடுங்கள். போதையில் வீழ்ந்தவர்களை ஒதுக்கிவிடாமல் புனர்வாழ்வின் மூலம் மீட்டெடுப்போம். ஆனால் இந்த நஞ்சை எமது மண்ணில் பரப்புபவர்களுக்கு எவ்வித இடமும் கொடோம்.
போதைகள் அற்ற, போதைப்பொருள் பாவனை அற்ற தாயகமே எமது இலக்கு. அந்த இலக்கை அடையும் வரை ஓயமாட்டோம்.
போதையற்ற தாயகத்தை உருவாக்குவோம், நமது எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.
விரைவில் களத்தில் சந்திப்போம்.
பாஸ்கரன் கந்தையா
