போப் லியோ XIV அவர்களின் நுரையீரலில் உள்ள கட்டியை அகற்றவும், அது புற்றுநோய்க் கட்டியா என்பதைக் கண்டறியவும் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.
71 வயதான போப் லியோ XIV, ரோமில் உள்ள புகழ்பெற்ற ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த மருத்துவமனை பல தசாப்தங்களாக போப்பாண்டவர்களுக்கு முக்கிய சிகிச்சை மையமாக இருந்து வருகின்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தனது உடல்நிலை குறித்து அவர் தெரிவித்திருந்தார். இதன் மூலம், போப்பாண்டவர்களின் உடல்நிலை தொடர்பான தகவல்களை வெளிப்படையாகப் பகிர்வதில் புதிய அணுகுமுறை பின்பற்றப்படுவதாகக் கருதப்படுகிறது.
குறித்த அறுவை சிகிச்சையின்போது அவருக்கு பொது மயக்க மருந்து வழங்கப்படவுள்ளதுடன், சுமார் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 20ஆம் திகதி வரை அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும், நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள தென் அமெரிக்கப் பயணத்தை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரலில் உள்ள கட்டி புற்றுநோய்த் தன்மை கொண்டதா என்பதை உறுதிப்படுத்த மேலதிக பரிசோதனைகள் அவசியமாகும். கட்டி புற்றுநோய்த் தன்மை கொண்டதாக இருந்தாலும், அது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டிருந்தால் சிகிச்சைக்கான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், போப் லியோ XIV அவர்களின் நுரையீரலில் உள்ள கட்டியின் தன்மை குறித்த இறுதி மருத்துவ முடிவு இன்னும் வெளியாகவில்லை.
