ரஷ்யப் படைகளால் உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்கரான ஸ்டீபன் ஹப்பார்ட் விடுவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் புதன்கிழமை அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் உடனான பேச்சுவார்த்தையின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கூலிப்படை வீரராகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஹப்பார்ட் சிறைபிடிக்கப்பட்டார். எனினும், அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மூடிய அறை விசாரணையில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஹப்பார்ட் தற்போது விமான நிலையத்தில் இருப்பதாக புதின் தெரிவித்தார். அவர் தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக நாடு திரும்புவதாக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த வாரம் தொலைபேசி மூலம் புதினுடன் உரையாடியபோது ஹப்பார்டை விடுவிக்குமாறு நேரடியாகக் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுதலைக்காக அமெரிக்கா ரஷ்யாவுக்கு எவ்விதப் பரிமாற்றத்தையும் வழங்க வேண்டியிருக்கவில்லை என்றும் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.
எனினும், புதிய சுற்றுப் பொருளாதாரத் தடைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது ஒரு முக்கியமான விட்டுக்கொடுப்பு என அவர் பின்னர் விளக்கினார். தடைகள் விதிக்கப்பட்டிருந்தால் பேச்சுவார்த்தைகள் முற்றிலும் முடங்கியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடுதலை, அமெரிக்கா – ரஷ்யா இடையிலான உறவுகளிலும் உக்ரைன் போர் தொடர்பான இராஜதந்திர முயற்சிகளிலும் கவனம் பெற்றுள்ளது.
