ஆஸ்திரியாவின் டைரோல் மாகாணத்தில், வழிதவறிச் சென்ற கன்றுக்குட்டியொன்று வீட்டின் உலோகக் கூரையில் சிக்கிக்கொண்ட நிலையில், சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் இணைந்து ஒரு மணி நேரப் போராட்டத்தின் பின்னர் அதனைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இச்சம்பவம், டைரோல் மாகாணத்தின் பிரிக்ஸென்டல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஹோப்கார்டன் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின்னால் அமைந்திருந்த மேய்ச்சல் நிலத்திலிருந்து தப்பிச் சென்ற கான்ராட் எனப் பெயரிடப்பட்ட கன்றுக்குட்டி, அருகிலிருந்த வீட்டின் வழுக்கும் உலோகக் கூரையின் மீது ஏறியுள்ளது. அங்கிருந்த சிறிய விளிம்பின் வழியாகச் சரிந்து சென்ற கன்றுக்குட்டி, கூரையின் தட்டையான பகுதியில் சிக்கிக்கொண்டது.
கூரையின் சரிவிலிருந்து மீண்டும் மேலே செல்ல முடியாத நிலையில் கன்றுக்குட்டி தவித்துள்ளது. அதேவேளை, கூரையின் மறுபுறத்தில் இருந்து தரை பல மீற்றர் கீழே இருந்ததால், அது கீழே விழும் அபாயமும் காணப்பட்டது.
இதையடுத்து, ஹோப்கார்டன் தன்னார்வத் தீயணைப்புப் படையினருக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் நம்புவதற்குக் கடினமானதாகத் தோன்றிய தகவலை உறுதிப்படுத்துவதற்காகச் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், கன்றுக்குட்டி உண்மையிலேயே கூரையில் சிக்கியிருப்பதைக் கண்டனர்.
தொடர்ந்து, சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பின்னர் கன்றுக்குட்டி பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
ஆஸ்திரியாவின் க்ரோனென் ஸைடுங்’ செய்தித்தாள் வெளியிட்ட தகவலின்படி, மீட்கப்பட்ட கான்ராட் கன்றுக்குட்டிக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களை ஹோப்கார்டன் தன்னார்வத் தீயணைப்புத் துறையினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
