சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த திருச்சி பழைய காவிரி பாலம் இன்று திறக்கப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-38) சஞ்சீவி நகர் – திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. திருச்சி – சென்னை வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது, இதனருகே புதிய பாலம் கட்டப்பட்டது.இதில், பழைய காவிரி பாலத்தில் 2010-இல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தப் பாலத்தில் மீண்டும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக இந்தப் பாலம் கடந்த ஜூன் 25 முதல் தற்காலிகமாக மூடப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்தது.
பராமரிப்பு மற்றும் சீரமைப்புக்காக கடந்த ஜூன் 25 முதல் திருச்சி பழைய காவிரிப் பாலத்தில் போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு, மூடப்பட்டது.
இதையடுத்து ரூ. 10 கோடியில் பாலத்துக்கு அடியில் உள்ள 120 பேரிங்குகள் புதிதாக மாற்றப்பட்டன. பாலத்துக்கு மேல் பகுதியில் இரண்டு தூண்களுக்கு நடுவில் உள்ள கான்கிரீட் பாதைகளை இணைக்கும் 16 பகுதிகள் புதிதாக போடப்பட்டன. நடைபாதை மேம்படுத்தப்பட்டு, பாலத்துக்கு வண்ணம் பூசப்பட்டது.
இதற்காக பாலம் முழுமையாக மூடப்பட்டிருந்ததால், மாநகரில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனவே, பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். திருச்சி எம்.பி. துரை வைகோவும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் பேசி பாலப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், பழைய காவிரிப் பாலத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வியாழக்கிழமை (அக். 15) மாலை 4 மணியளவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
