செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் “செயற்கை நுண்ணறிவுப் படை” ஒன்றை உருவாக்கி, அதற்கென சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், செயற்கை நுண்ணறிவு தொடர்பான அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற தனது நிலைப்பாட்டை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய சில ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் தீயவற்றையும் தேடுவோம். எங்களிடம் ஏற்கனவே உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை அமைப்பின் மூலம் அதை மிக எளிதாகச் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது முதல் பதவிக்காலத்தில் விண்வெளிப் படையை (Space Force) உருவாக்கியதைப் போலவே, செயற்கை நுண்ணறிவுப் படையையும் உருவாக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்காக விரைவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான “சார்” (AI Czar) ஒருவரை அறிவிக்க உள்ளதாகவும், உயர் நுண்ணறிவுத் திறன் (IQ) கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தப் புதிய அமைப்பின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து இதுவரை விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு அதிகாரியின் பொறுப்புகள் என்னவாக இருக்கும், அந்தப் பதவிக்கு டிரம்ப் யாரையேனும் தேர்வு செய்துள்ளாரா, மேலும் “செயற்கை நுண்ணறிவுப் படை” என்பது விண்வெளிப் படையைப் போன்று அமெரிக்க இராணுவத்தின் ஒரு பிரிவாக இருக்குமா என்பதும் தெளிவாகவில்லை.
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில், 2019ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளிப் படையை உருவாக்கினார். 1947ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முதல் புதிய அமெரிக்க இராணுவ சேவையாக அது குறிப்பிடப்படுகிறது.
