கிரேக்கத்தின் கோர்ஃபு தீவிலிருந்து வந்த விமானம் தொடர்பாக ஏற்பட்ட அவசரகால எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜெர்மனியின் நியூரம்பெர்க் விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய சிக்கல் குறித்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அவசரகாலக் குறியீடு அனுப்பப்பட்டதாக டிபிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விமான நிலையத்தைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதுடன், யூரோஃபைட்டர் போர் விமானங்களும் குறித்த விமானத்துக்குப் பாதுகாப்பு வழங்கின. பின்னர் அந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் எந்தவிதமான ஆபத்தும் கண்டறியப்படவில்லை என காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும், அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெளிவாகவில்லை.
இதற்கிடையில், விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படும்போதும் தரையிறங்கும்போதும், ட்ரோன் எனச் சந்தேகிக்கப்படும் பொருளொன்றைக் கண்டதாக மூன்று விமானிகள் தனித்தனியாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், எல்லைக் காவல்துறையினர் மற்றும் ஜெர்மனியின் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவை இணைந்து, காவல்துறை ஹெலிகாப்டரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தன. இருப்பினும், ட்ரோன் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவங்களால் ஆறு விமானங்களின் பயணங்கள் தாமதமடைந்தன. மேலும், நியூரம்பெர்க்கிற்கு வந்துகொண்டிருந்த இரண்டு விமானங்கள் கொலோன் மற்றும் பிராக் நகரங்களுக்கு மாற்றி அனுப்பப்பட்டன.
விமானத்தில் ஏற்பட்ட அவசரகால எச்சரிக்கைக்கும், ட்ரோன் தொடர்பான தகவல்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆரம்பத்தில் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
