
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்பிள்ளை ஜெகதீபன், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்ற அவர், 142 போட்டியாளர்கள் மத்தியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். பாரிஸ் துணை மேயர் நிக்கோலஸ் பொன்னட் ஓலால்ட்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 143 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14th arrondissement), 103 ரூ டிடோ (103 Rue Didot) என்ற முகவரியில் அமைந்துள்ள இவரது ‘ஃபூர்னில் டிடோ’ (Fournil Didot) பேக்கரிக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.
இந்த வெற்றிக்காக அவருக்கு €4,000 (சுமார் 13 இலட்சம் இலங்கை ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன், அடுத்த ஓராண்டிற்கு பிரான்ஸ் ஜனாதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனைக்கு (Élysée Palace) பேக்கட் ரொட்டிகளை வழங்கும் கௌரவமான ஒப்பந்தமும் அவருக்கு கிடைத்துள்ளது.
வெற்றிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜெகதீபனின் கடைக்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கடின உழைப்பு, பாரிஸின் பாரம்பரிய அடையாளத்தில் ஒரு காவியமாக மாறியுள்ளதாகப் பாராட்டுகள் குவிகின்றன.
இதற்கு முன்னதாக, 2023-ஆம் ஆண்டில், இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இந்தப் புகழ்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கைத் தமிழர் என்ற வரலாற்றைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
