கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ முகாமிற்காக பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் பலத்த எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
காணி அளவீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் இன்று காலை 8 மணியளவில் இராணுவ முகாம் முன்றலில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட காணி உரிமையாளர்கள், இராணுவத்தினருக்கும் அரச தரப்பிற்கும் எதிராகப்பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தித் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே முன்னதாக அமைச்சர் சந்திரசேகரனின் தலையீட்டில் அளவீட்டு பணிகளை இடைநிறுத்துவதற்கான பணிப்புரை நில அளவைத்திணைக்களத்திற்கு கிளிநொச்சி மாவட்ட செயலரினால் பிறப்பிக்கப்பட்டுவிட்டதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவிகின்றன.
முன்னதாக தீவகப்பகுதிகளில் கடற்படை முகாம்களிற்கென காணிகளை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்கள் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.