இன்னும் நாம் தலை நிமிர்ந்திருக்க
கனடாவிலிருந்து கா .ஜெகசோதிலிங்கம் எழுதிய கவிதை.

களமாடும் நெறி யாவும்
உளமாறச் சொன்னவள் அன்னை
தாய் நாட்டின் துயர்தன்னைத்
தாலாட்டில் கேட்ட மைந்தன்
தமிழ் வாடும் நிலை போக்கா
ஒரு நாளும் ஓயமாட்டான்
அடியாத மாடு படியாது
இடியாத மேடு குறையாது
முடி ஆண்ட எங்களினம்
அடிவங்கி வீணாய்ச் செத்துப்
பிடி சாம்பல் ஆவதற்கோ அன்னை
தனையாக எனைப்பெற்றாள்
நான் வேலெடுத்த மறவரினம்
போர் தொடுக்கச் செல்லுகின்றேன்
வங்கக்கடல் அலைகள் துள்ளி
எங்கும் கரை நிலங்களுரசிப்
பொங்கு தமிழ் வென்ற செய்தி
இரைந்து பாட நீ கேட்பாய்
அஃகுதிலை போர்க்காயம் பட்டு
நான் மடிந்தங்கு வீழ்ந்து போனால்
தாலாட்டில் வீரங்குன்றா
ஓங்காரத் தமிழிப் பாடி
தனையன்தனை வளர்த்துவிடு
தமிழைக் காக்கும் மைந்தனாக
நீ கோழையின் மனைவியல்ல
கொப்பளிக்கும் துயரங்கட்டு
கன்னமதை ஊற வைக்கும்
விழி ஊறும் நீரகற்றறு
இன்னும் நாம் தலை நிமிர்ந்திருக்க
பின்னும் பிறப்பவர் வீரத்தாயாக-வேண்டும்.
போர் முரசு கொட்டுகின்றதே
கூர்வாளை எடுத்து வாராய்
கொடிதான பகை வந்ததென்று
அஞ்சி நீயும் கலங்காதே
குடிகாக்க வாளேந்திய தமிழன்
முடிக்காத பகையுமுண்டோ
அகநாநூறு நெய்த கண்மணியே
அச்சங்கொள்ளும் மடமை விடு
நீ முறங்கொண்டு புலியடித்த
மறத்தமிழர் வமச மங்கை
புறநாநூறைப் புனைய வைத்த
புலி வீரம் கொண்ட அன்னை
எக்கல் விழும் வயிறுதனை
நிரப்புவதுதான் எம் அழகோ
களம் கண்ட கால் சுழன்று
பாதம் கிளறிய குண்டைவிட
மங்கையுன் கள்ளச் சிரிப்பின்
கன்னக்குழி மிகை அழகோ
அமுத வாய் இதழூறும்
தாதுநீர்ச் சுவை வேண்டாம்
உறை கழன்ற வாள் சுழன்று
எதிரி படைத் தலை கொய்த
குருதி மணம் கண்ட பின்பே
தீருமென் சுதந்திர தாகம்
உன் கடைவிழி நீரகற்று
நாம் மறக்குடி வம்சமாகும்
திடம் கொண்ட வீரத்துடன்
விடை கெடுத்து அனுப்பிவிடு
படை கொண்டு களஞ்சென்று
தொடை தட்டும் படை வெல்வேன்
