மாத்தறை மாவட்டத்திலுள்ள இரு சுற்றுலா ஹோட்டல்களில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக தண்ணீர் போத்தலை விற்பனை செய்த நிலையில் இரு ஹோட்டல்களுக்கும் தலா ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் 10 இலட்சம் அபராதம் விதித்து மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ் வழக்கானது நேற்று (13) நுகர்வோர் விவகார ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நுகர்வோர் விவகார ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மாத்தறை மாவட்ட அலுவலகம் நடத்திய சோதனைகளின்போது, சம்பந்தப்பட்ட இரண்டு சுற்றுலா விடுதிகளும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் தண்ணீர் போத்தல்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.
விசாரணையில், ஒரு லீற்றர் தண்ணீர் போத்தல்அதன் அதிகபட்ச சில்லறை விலையான ரூ.100க்கு பதிலாக ரூ.450க்கும், 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையான ரூ.70க்கு பதிலாக ரூ.300க்கும் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
