யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம் (பதவியா மற்றும் ஹொரோவபொத்தானை), வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதோடு, பின்தங்கிய சமூகங்களுக்கு தரமான கண் சுகாதார சேவைகளின் அணுகலை மேம்படுத்துவதாகும்.
யாழ்ப்பாண கலாச்சாரம்
அறுவைச் சிகிச்சையின் போது, யாழ்.போதனா வைத்தியசாலை, கண் மருத்துவ நிபுணர் வைத்தியர் எம். மலரவன், கண் அறுவைச் சிகிச்சை நிபுணர் மற்றும் வெளிக்கண் நோய் நிபுணர் வைத்தியர் எஸ். சுஜீவன், சிரேஷ்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் ரி. திலீபன் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
இந்நிகழ்ச்சி ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் இலங்கையைத் தளமாகக் கொண்ட Assist Resettlement and Renaissance (Assist RR) அமைப்பின் பகுதி நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 312 கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 215 நோயாளர்கள் (68.9%) வெளி மாவட்டங்களிலிருந்து பங்கேற்றிருந்தனர்.
இத்திட்டம் பொதுமக்களுக்கான கண் சுகாதார சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், பார்வையை மீட்டெடுத்து கண்புரை நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முன்மாதிரி வெளிச்சேவைத் திட்டமாகவும் திகழ்கிறது.
இந்நிகழ்ச்சியின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தல், ஐக்கிய நாடுகள் சபையின் பல நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) ஆதரிக்கின்றது. அவற்றில் SDG 1 (வறுமையற்ற உலகம்), SDG 2 (பசியற்ற உலகம்), SDG 3 (நல்ல ஆரோக்கியமும் நல்வாழ்வும்), SDG 8 (கண்ணியமான வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும்), SDG 11 (நிலைத்த நகரங்களும் சமூகங்களும்), SDG 13 (காலநிலை நடவடிக்கை), SDG 16 (அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்) மற்றும் SDG 17 (இலக்குகளுக்கான கூட்டாண்மை) என்பன அடங்கும்.
ஒருங்கிணைக்கப்பட்ட வெளிச்சேவை அணுகுமுறையின் மூலம் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகளவிலான கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதன் மூலம், இத்திட்டம் பார்வையை மீட்டெடுத்து, வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தி, சமூக உள்ளடக்கத்தை ஊக்குவித்ததுடன், மாவட்டங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது.
மேலும், நோயாளர்களின் பயணங்கள் திறமையாக ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம் போக்குவரத்து தொடர்பான கார்பன் வாயு (Carbon Emission) வெளியீடுகளும் குறைக்கப்பட்டன.
அதேவேளை, அதிகளவிலான அறுவைச் சிகிச்சை முறைமையானது அறுவைச் சிகிச்சைப் பொருட்கள், அறுவைச் சிகிச்சை கூட வளங்கள் மற்றும் கிருமி நீக்க செயல்முறைகளின் பயன்பாட்டை மேம்படுத்தி, மருத்துவக் கழிவுகளையும் அதனுடன் தொடர்புடைய கார்பன் தடத்தையும் (Carbon Footprint) குறைக்க உதவியது.
இம்முயற்சி உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒருங்கிணைந்த மக்கள் மையப்படுத்தப்பட்ட கண் பராமரிப்பு (Integrated People-Centered Eye Care – IPEC) கட்டமைப்புடன் இணங்குவதோடு, அனைவருக்கும் கண் சுகாதார சேவைகளை உறுதிப்படுத்தும் மற்றும் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பை ஒழிக்கும் உலகளாவிய இலக்கிற்கும் பங்களிக்கிறது என யாழ் . போதனா வைத்தியசாலை கண் மருத்துவ நிபுணர் வைத்தியர் எம். மலரவன் தெரிவித்துள்ளார்.
