உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன வழங்கிய வாக்குமூலங்கள் பேசுபொருளாகியுள்ளது.
முன்னாள் அரச புலனாய்வு சேவை தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன், விக்ரமரத்ன வழங்கிய சாட்சியங்கள் முக்கிய ஆதாரங்களாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
சுரேஸ் சாலே தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்கள் ஊடாக ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளின் திசையை மாற்ற முயன்றதாகவும், விசாரணை அதிகாரிகள் மீது தாக்கம் செலுத்த முயற்சித்ததாகவும் நீதிமன்றத்திற்கு சி.டி. விக்ரமரத்ன மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இலங்கையின் 35 வது காவல்துறை அதிபராக பணியாற்றிய சிடி. விக்ரமரத்ன அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் காவல்துறை அதிபர் பதவிக்கு இவரது பெயரை அவரே பரிந்துரை செய்து நியமித்தார். அதுமட்டுமன்றி இவரது பதவிக்காலத்தில் கோத்தாபாயவால் நான்கு முறைக்கும் மேலாக இவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.
கடந்த மே மாதமளவில் ராஜபக்சக்களின் ஊழல் சாம்ராஜ்யத்தின் முக்கிய புள்ளியான சிறீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியாகவும் பார்க்கப்பட்ட கபில சந்திரசேனவும் இதேபோன்று மர்மமான முறையில் மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
