இலங்கை படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் போரட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் முல்லைதீவின் கேப்பாப்புலவு மக்களும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Geographic Reference
இலங்கை விமானப்படையின் ஆக்கிரப்பிலுள்ள கேப்பாப்புலவு கிராமத்தை விடுவிக்க கோரியே மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர் போராட்டத்தை நடாத்தி வரும் கேப்பாப்புலவு மக்களை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் ரவிகரன் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை 29வது நாளாகவும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் அவர்களும் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்று மக்களின் தொடர்ச்சியான போராட்டம் தொடர்பாக கலந்துரையாடி போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே பலாலியில் பொதுமக்களது காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுவரும் இராணுவ வைத்தியசாலையினை உள்ளுராட்சி மன்ற அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் கட்டடமென்ற வகையில் இடித்தகற்றவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
