தமிழ் பேசும் மக்களின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த 6 பிரதான தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நீதி, சமாதானம் மற்றும் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை இக்கூட்டுப் பயணம் தொடரும் எனத் தெரிவித்துள்ள தலைவர்கள், அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
தத்தமது அரசியல் கொள்கைகளைத் தக்கவைத்துக்கொண்டே, பொதுப் பிரச்சினைகளில் மட்டும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவுள்ள இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் செயற்படுகிறார்.
