கிளிநொச்சி, அக்கராயன் பகுதியின் கண்ணகிபுரம் பகுதியில் சுமார் 29 ஏக்கர் வனப்பகுதியைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, ஆக்கிரமிக்க முயன்ற பிரதான சந்தேகநபர் உட்பட 9 பேரைக் காவற்துறை விசேட அதிரடிப்படையினரும் வனப்பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது அதிகாரிகளுடன் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் குழப்ப நிலைமைகளைக் கட்டுப்படுத்தக் காவற்துறையினர் வேட்டுக்களைத் தீர்த்ததுடன், கைது செய்யப்பட்டவர்களில் 8 பேரை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Geographic Reference
கடந்த 2025ஆம் ஆண்டு முதல் கண்ணகிபுரம் வனப்பகுதியில் 29 ஏக்கர் காட்டினை அழித்து, அப்பகுதியில் கற்றாழைத் தோட்டங்கள் பண்ணைகள் மற்றும் அனுமதியற்ற கட்டடங்களை நிர்மாணித்து ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை உருவாக்கப் பிரதான சந்தேகநபர் முயன்று வந்துள்ளார். கட்டடங்கள் மற்றும் பண்ணைகளுக்குக் கரைச்சி பிரதேச சபை உள்ளிட்ட எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதிகளும் பெறப்படவில்லை.
வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினால் இவருக்கு எதிராக ஏற்கனவே 06 குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றில் நிலுவையிலுள்ளன. கடந்த பெப்ரவரி 07ஆம் திகதி கைது செய்யப்பட்டுப் பிணையில் வந்தவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கடந்த ஜூலை 14ஆம் திகதி நீதிமன்றினால் பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 8 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நாளை ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பைநடத்துவற்கும் திகதியிட்டுள்ளார்.
இதனிடையே அத்தகைய கும்பல் கிளிநொச்சியின் பூநகரியிலும் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் பூநகரி பிரதேசசபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
