ஊடக அறிக்கை
36 ஆண்டுகளாக நீடிக்கும் வந்தாறுமூலை 158 தமிழர்களின் காணாமலாக்கல் – சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு
மட்டக்களப்பு, 05 செப்டெம்பர் 2026
இன்று, மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புத் தேடி தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்களில் 158 பேர் இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆம் ஆண்டு நினைவு தினமாகும்.
1990 செப்டெம்பர் 5ஆம் திகதி, ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புக்காக தங்கியிருந்த வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமுக்குள் இராணுவத்தினர் நுழைந்தனர். அங்கு தங்கியிருந்த ஆண்கள் வரிசைப்படுத்தப்பட்டுஇரானுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி அணிந்திருந்த நபர்களால் தலையாட்டி அடையாளம் காணப்பட்ட பின்னர், 158 பேர் இராணுவத்தினரால் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
விசாரணையின் பின்னர் விடுவிப்பதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தபோதிலும், அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கோ அகதி முகாமுக்கோ திரும்பவில்லை.
அந்தக் காலகட்டத்தில் வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 45,000 பொது மக்கள் அகதிகளாக தங்கியிருந்ததாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தபோதிலும், காணாமலாக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் இன்று வரை முழுமையான உண்மையும் நீதியும் வெளிக்கொணரப்படவில்லை.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பதிவு செய்த சம்பவம்
1993ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் Amnesty International, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமிலிருந்து 1990 செப்டெம்பர் 5ஆம் திகதி இளம் தமிழ் ஆண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணப்படவில்லை எனப் பதிவு செய்துள்ளது.
மேலும், அச்சம்பவம் தொடர்பாக Human Rights Task Force (HRTF) மேற்கொண்ட விசாரணைகளை மேற்கோள் காட்டிய Amnesty International, சம்பவத்துடன் தொடர்புடையதாக சாட்சிகளால் குறிப்பிடப்பட்ட நான்கு பாதுகாப்புப் படை அதிகாரிகளின் பெயர்களும் HRTF அறிக்கையில் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவித்துள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணை நடத்தியது
1994 நவம்பர் 30ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற வலிந்து கானாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ணபிள்ளை பாலகிட்ணர் தலைமையிலான இந்த ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை 1997ஆம் ஆண்டு வெளியிட்டது.
ஆணைக்குழுவின் பதிவுகளின்படி, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் 1990 செப்டெம்பர் 5ஆம் திகதி 158 பேர் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டதாக பதிவாகியுள்ளது.
158 பேரின் பெயர்ப்பட்டியல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவர்களில் 92 பேர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக 83 சாட்சிகள் சாட்சியமளித்ததாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.
36 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி எங்கே?
மேற்படி சம்பவம்ங்கள் தொடர்பாக சாட்சிகள் உள்ளது.
பெயர்ப்பட்டியல் உள்ளது.
மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் உள்ளது.
விசாரணைகளும் இடம்பெற்றன.
ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசாரணை நடத்தியது.
ஆனால் 36 ஆண்டுகள் கடந்தும் காணாமலாக்கப்பட்டஉறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அவர்களது குடும்பங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.
பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை.
குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
இதுவே தமிழ் தொடர்ச்சியான இன சுத்திகரிப்பிற்குள்ளாகி வருகின்றார்ள் என்பதற்கு ஆதாரமாகும்.
ஏன் சர்வதேச விசாரணை?
உள்நாட்டு விசாரணைகள் என்றும் ஆணைக்குழுக்கள் மூலம் விசாரணை என்றும் பல ஆண்டுகளாக உண்மைகள் வெளிக்கொணரப் படாமல் சர்வதேசத்தை ஏமாற்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்காமல் இளுத்தடிப்பு செய்யப்படுகின்றது.
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற காணாமலாக்கல்கள், படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் ஏனைய கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான நம்பகமான, சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான விசாரணை அவசியமாகியுள்ளது.
எனவேதான், வந்தாறுமூலையில் 158 தமிழர்களின் காணாமலாக்கல் உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.
இது பழிவாங்கலுக்கான கோரிக்கை அல்ல.
இது உண்மைக்கான கோரிக்கை.
நீதிக்கான கோரிக்கை.
பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கை.
காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கை.
36 ஆண்டுகளாக விடை கிடைக்காத ஒரு கேள்விக்கு இனியும் மௌனம் பதிலாக இருக்க முடியாது.
வந்தாறுமூலை கிழக்குபல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்திருந்த 158 தமிழர்களுக்கு என்ன நடந்தது?
இந்தக் கேள்விக்கான உண்மையான பதில் வெளிப்படுத்தப்பட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் யார் என்ற உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட வேண்டும்.
நீதியைத் தாமதிப்பது, நீதியை மறுப்பதற்கு சமம்.
எனவே, இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறைகளைத் தாண்டி, சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையின் ஊடாக வந்தாறுமூலை காணாமலாக்கல் சம்பவம் உள்ளிட்ட அனைத்து கடுமையான மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் நியாயமான தீர்வு வழங்கப்படுமேயானால் அது சர்வதேச நீதி வழங்கள் பொறிமுறையூடாக மட்டுமே சாத்தியம் என நாம் வலியுறுத்துகிறோம்.
வந்தாறுமூலை 158 பேரின் குடும்பங்களின் நீதிக்கான போராட்டம் தொடரும்.
உண்மை வெளிவரும் வரை – நீதி கிடைக்கும் வரை – எமது குரல் ஓயாது.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்
ச.சிவயோகநாதன்.
