இந்தோனேசியாவின் செமரு மலை 13 மணி நேரத்தில் 10 முறை வெடித்ததால், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நீர் ஓட்டங்கள் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள செமரு எரிமலை செவ்வாய்க்கிழமை குறைந்தது 10 முறை வெடித்துள்ளது. இதனால், எரிமலையின் உச்சிக்கு மேலே 900 மீற்றர் உயரம் வரை சாம்பல் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலை மற்றும் புவியியல் இடர் தணிப்பு மையத்தின் (PVMBG) தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை முதல் பிற்பகல் வரை பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இதன்போது வெளியேறிய சாம்பல் மேகங்கள் தென்மேற்கு மற்றும் மேற்கு திசைகளில் பரவியுள்ளன.
சில வெடிப்புகளின்போது, எரிமலையின் உச்சிக்கு மேலே 900 மீற்றர் உயரம் வரை சாம்பல் தூண்கள் எழுந்துள்ளன. அண்மைய வெடிப்பின்போது சுமார் 600 மீற்றர் உயரத்துக்கு சாம்பல் பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் நான்கு நிலைகளைக் கொண்ட எரிமலை எச்சரிக்கை முறையில், செமரு எரிமலை தற்போது மூன்றாவது எச்சரிக்கை நிலையில் உள்ளது.
இதனால், எரிமலையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பெசுக் கோபோகன் ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில், எரிமலையிலிருந்து 13 கிலோமீற்றர் வரையான தூரத்திற்குள் மக்கள் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், எரிமலையின் உச்சி மற்றும் எரிமலைவாயிலிருந்து ஐந்து கிலோமீற்றர் சுற்றளவிற்குள் செல்வதையும் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிமலைச் சாம்பல், எரிமலைச் சேற்றுப் பெருக்கு மற்றும் வெளியேறும் சூடான பாறைகள் காரணமாக ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
