பிரான்ஸ் நாட்டில் விலைவாசி உயர்வு, சமூக ஏற்றத்தாழ்வுகள், பள்ளிகள் மற்றும் பொதுச் சேவைகளில் நிலவும் குறைபாடுகளைக் கண்டித்து நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் மஞ்சள் அங்கி இயக்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் பல இடங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதனால் கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்கள் மற்றும் சில அரசு அலுவலகங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு கூறுகையில், போராட்டங்களின்போது 150 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாகவும், நாடு முழுவதும் 1,200 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்தப் போராட்டங்களில் சுமார் 5.5 இலட்சம் பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
பாரிஸ், மார்சேய், லியோன், லிமோஜஸ் உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. லியோன் நகரில் சுற்றுலா அலுவலகக் கட்டிடத்திலும், லிமோஜஸ் நகரில் உள்ள நகர மன்றக் கட்டிடத்திலும் தீ விபத்துகள் ஏற்பட்டன. இதனால் பொதுச் சொத்துகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது.
பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய வசதிகள் இல்லாமை மற்றும் பொதுச் சேவைகளின் மோசமான நிலை ஆகியவை மக்களின் அதிருப்திக்குக் காரணமாக அமைந்ததாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
ஆதரவு அளி
இதற்கிடையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்தார். பொதுச் சொத்துகளையும் வணிக நிறுவனங்களையும் சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
