உயர்ந்த விலைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கல்வி முறையின் அவலநிலை ஆகியவற்றுக்கு எதிராக, பிரான்ஸ் முழுவதும் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாபெரும் பேரணிகளின் மத்தியில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .
நாடு முழுவதும் சுமார் 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
பாரிஸில் மட்டும் 1,10,000 பேர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதாகவும், நாடு முழுவதும் 110 பேரணிகள் நடைபெற்றதாகவும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் தெரிவித்தார்.
நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களில் சுமார் 550,000 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரிஸ், மார்சேய், ரென்னெஸ், துலூஸ், ஆங்கர்ஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கைதுகளுக்கு கொள்ளையடிக்க முயற்சித்தல், சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் மோதல்கள், தெருவோரப் பொருட்களுக்குத் தீ வைத்தல் மற்றும் அதிகார மையங்களையும் ஊடகங்களையும் குறிவைத்தல் ஆகியவை இத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது பல்வேறு நகரங்களில் பொதுக் கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், கடைகளும் சூறையாடப்பட்டன. மத்திய பிரான்சின் லிமோஜ் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மண்டபத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது. இந்தச் சம்பவத்தை நகர மேயர் கியோம் குரின் கடுமையாகக் கண்டித்தார்.
பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு வெளியிட்ட தகவலின்படி, போராட்டங்களின்போது 150 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தீவிர இடதுசாரிக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தலைநகர் பாரிஸில் மட்டும் 855 பேர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. அவர்களில் 171 சிறார்கள் உட்பட 517 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். திருட்டுப் பொருட்களைக் கையாண்டதாகச் சந்தேகிக்கப்படுதல், வன்முறையில் ஈடுபடும் நோக்கத்துடன் குழுவில் பங்கேற்றல் மற்றும் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்சேய், லியோன், அவிக்னான் மற்றும் கிரெனோபில் உள்ளிட்ட நகரங்களிலும் பொதுக் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள், தடியடிகள் மற்றும் நீர்த்தாரைப் பீரங்கிகளைப் பயன்படுத்தினர்.
இதற்கிடையில், செயிண்ட்-எட்டியன் நகரில் காவல்துறையினர் வீசிய கையெறி குண்டு தாக்கியதில் 17 வயது இளைஞர் ஒருவர் தனது கையை இழந்ததாகப் பிரான்ஸ் நாட்டின் ‘லெ ஃபிகாரோ’ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு உயர்வால் பொதுமக்களிடையே நிலவும் அதிருப்தியும், அரசாங்கத்தின் செலவினக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் இணைந்து நாட்டில் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளன. 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த வன்முறைச் சம்பவங்கள் அரசியல் சூழலில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளன.
